தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள எல்ஜிஎம் (லெட்ஸ் கெட் மேரிட்) படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நேற்று (ஜூலை.09) தோனி தன் மனைவி சாக்‌ஷியுடன் சென்னைக்கு வருகை தந்தார்.  சென்னை வந்த தோனி - சாக்‌ஷி தம்பதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


தோனியின் கலகல பேச்சு


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியது தொடங்கி, தோனி தமிழ்நாட்டுடன் தனி பிணைப்பைக் கொண்டுள்ள நிலையில், தமிழ் சினிமாவில் தன் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தைத் தயாரித்துள்ளார் தோனி.


நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகைகள் இவானா, நதியா, நடிகர் யோகிபாபு  உள்ளிட்ட பலரும் நடித்துள்ள லெட்ஸ் கெட் மேரிட் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி இசையமைத்துள்ளார். காதலை மையமாகக் கொண்டு காமெடி ஜானரில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் சென்ற மாதம் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.


இந்நிலையில் இன்று எல்ஜிஎம் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனமீர்த்து வருகிறது. இந்த இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தோனி பேசியதாவது:


‘தமிழ் கெட்ட வார்த்தை தெரியாது’


“சென்னை சூப்பர் கிங்ஸூக்கு பெரிய விசில் போடு. எனக்கு தமிழ் மொழியில் எந்தக் கெட்ட வார்த்தைகளும் தெரியாது, அதனால் நான் என் மனைவிக்கு தமிழ் கெட்ட வார்த்தைகள் எதுவும் சொல்லிக்கொடுக்கல.  
ஆனால் எனக்கு மற்ற மொழிகளில் கெட்ட வார்த்தைகள் தெரியும்.


LGM படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பானவர்கள். படத்தில் நடித்த அனைவருக்கும் நதியா மேடமைப் பிடிக்கும். ஹரீஷ் கல்யாண், யோகிபாபு, இவானா அனைவரும் இப்படத்தில் சிறப்பாக பணியாற்றினர். நான் விதியை நம்புகிறேன். உங்களில் எத்தனை பேருக்கு இங்கு திருமணமாகி இருக்கிறது? அந்த வீட்டின் முதலாளி யார் என்பது உங்களுக்குத் தெரியும்...


‘நான் படத்தில் தலையிடல...’


எல்ஜிஎம் மிக வேகமாக எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம், நாங்கள் திட்டமிட்ட நேரத்தில் இந்தப் படத்தை எடுத்து முடித்தோம். எங்கள் படக்குழுவில் உள்ள அனைவருக்கும் உணவு நன்றாக இருப்பதை உறுதி செய்தோம். அனைவரையும் மகிழ்விக்க நான் விரும்பினேன்.


விரைவில் திரையரங்குகளில் எல்ஜிஎம் வெளியாக உள்ளது. படத்தைப் பாருங்கள். அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் பிரச்சினையை ஒரு பையன் எப்படி வேடிக்கையாக கையாளுகிறான் என்பதைப் பற்றிய கதை இது. ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற நேரத்தில் பட வேலைகள் நடந்ததால் நான் பட வேலைகளில் தலையிடவில்லை” என தோனி பேசியுள்ளார். 


முன்னதாக இந்த விழாவில் பேசிய தோனியின் மனைவி சாக்‌ஷி, “எங்கள் தயாரிப்பு நிறுவனம் தமிழில் படம் எடுக்க கணவர் தோனி தான் காரணம். நான் படத்தைப் பார்த்து விட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தின் மூலம் இப்போது எனக்கு சென்னையிலும் ஒரு குடும்பம் கிடைத்துள்ளது” எனப் பேசினார்.