மகேந்திர சிங் தோனி என்னும் பெயர் எப்போதும் வெற்றிக்குரிய மந்திரமாகவே பார்க்கப்படுகிறது. ஒரு கிரிக்கெட் வீரராக அறிமுகமாகி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5வது முறையாக கோப்பையையும் பெற்று தந்தார். கிரிக்கெட்டை தவிர விவசாயத்திலும் பெரும் லாபம் சம்பாதித்து வரும் தோனி, திரைப்பட தயாரிப்பு துறையில் கால் பதித்துள்ளார்.
தோனியின் மனைவி சாக்ஷிக்கு ஒரு சினிமா பிரியர். இவர் 'தோனி எண்டர்டெயின்மெண்ட்ஸ்' என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். மேலும் இந்த நிறுவனத்தின் முதல் படமாக 'எல்ஜிஎம்' (லெட்ஜ் கெட் மேரீட்) உருவானது.
இந்த படத்தில் ’பியார் பிரேமா காதல்’ , தாராள பிரபு போன்ற தமிழ் படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க, ‘லவ் டுடே’ படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இவானா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், நதியா மற்றும் யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில், 'எல்ஜிஎம்' படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக மகேந்திர சிங் தோனியும், சாக்ஷி சிங்கும் ஒன்றாக சென்னை வந்து பங்கேற்றனர். அப்போது பேசிய தோனி, "என்னுடைய டெஸ்ட் அறிமுகமானது சென்னையில் தான், என்னுடைய அதிக டெஸ்ட் ஸ்கோர் சென்னையில் தான், இப்போது தமிழில் எனது முதல் தயாரிப்பு திரைப்படம் - சென்னை எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது, நான் நீண்ட காலத்திற்கு முன்பே இங்கு தத்தெடுக்கப்பட்டேன்.
நான் என் மனைவிக்கு தமிழ் கெட்ட வார்த்தைகள் எதுவும் கற்பிக்கவில்லை. ஏனென்றால் எனக்கு தமிழ் மொழியில் எந்த கெட்ட வார்த்தைகளும் தெரியாது. ஆனால் எனக்கு மற்ற மொழிகளில் தெரியும்.
எங்களுடைய முதல் தயாரிப்பாக எம்ஜிஎம் படத்தை தமிழ் மொழியில் எடுத்திருக்கிறோம். ஒட்டுமொத்த படக்குழுவும் ஒத்துழைத்ததால்தான் இந்தப் படத்தை மிகக்குறுகிய காலகட்டத்தில் அதிவேகமாக எடுக்க முடிந்தது. இதில் பல சீனியர் நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல புதிய முகங்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள்.
நடிகை நதியா தனது கண்களால் படம் முழுக்க தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார். மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையேயான கதை. இரண்டு பெண்களுக்கு நடுவே ஹரீஷ் கல்யாண் ரொம்பவே சிக்கி நடித்திருப்பார்.
இந்த படத்தை தொடங்கியது முதலே ஒன்றில் மட்டுமே உறுதியாக இருந்தேன். கிரிக்கெட் விளையாடும்போது நாங்கள் நல்ல உணவைத்தான் எதிர்பார்ப்போம். அதுபோல இங்கேயும் அனைவருக்கும் நல்ல உணவை கொடுக்கச் சொன்னோம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்படக் குழுவில் உள்ள அனைவருக்கும் நல்ல உணவைக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். எம்ஜிஎம் படம் குழந்தைகளுடன் சென்று பார்க்கக்கூடிய நல்ல பொழுதுபோக்கு படம். திருமணம் ஆனவர்களுக்கு வீட்டில் பாஸ் யார் என்பது உங்களுக்கே தெரியும்” என முடித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் தீபக் சாஹர் குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ தீபக் சாஹர் எனக்கு போதை பொருள் போன்றவர். அவர் அருகில் இல்லையென்றால் எங்கே என்று தேடுவோம். அதேநேரத்தில் அருகில் இருந்தால் ஏன் இருக்கிறார் என தோன்றும்” என பேசினார்.