‘சீதாராமம்’ படத்தில் நடித்த தன்னை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகை மிருணாள் தாகூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் வெளியிட்டு இருக்கும் கடிதத்தில், “ சீதாராமம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோதே, இந்தப்படம் மிகவும் ஸ்பெஷலான படமாக இருக்கும் என தெரியும். இந்தக்கதையை கேட்ட உடனே எந்த வித சந்தேகமும் இல்லாமல் நான் நடிக்க ஒத்துக்கொண்டேன். இன்னும் குறிப்பாக, சதீஸ்கரில் ஷூட்டிங்கில் இருக்கும் போது இயக்குநர் கதையை சொன்ன போது நான் அப்படியே உருகிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். இன்று தெலுங்கு ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டதால்தான் இதைச் சொல்கிறேன்.
படம் வெளியான அன்றைய நாளில் இருந்தே நேரடியாகவும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும் ரசிகர்கள் அன்பை பொழிந்து வருகின்றனர். அந்த அன்பில் நான் முழ்கிவிட்டேன் என்றே சொல்லலாம். தென்னிந்திய ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டது என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது. அத்துடன் என்னை நன்றியுள்ளவளாகவும் உணரவைத்தது.
புதிய கதாபாத்திரங்கள் மற்றும் புதிய முயற்சிகளை நான் தேர்வு செய்து நடிக்கும் போது, அதை முழுமனதாக ஏற்றுக்கொள்ளும் ரசிகர்களுக்கு என்னுடைய மிகப்பெரிய நன்றி. சோனியா என்ற கதாபாத்திரத்தில்தான் இந்தப்பயணத்தை நான் ஆரம்பித்த போது, நீங்கள் கொடுத்த அன்பை நான் என்றுமே மறக்க மாட்டேன். இன்று சீதா உங்களுடையவளாகிவிட்டாள். இந்தப்படத்தை பார்த்த போது இயக்குநர் ஹனுசாரை கட்டிப்பிடித்து அழுதேன். ஏனென்றால் அவர் என்னை ஒரு புதிய இடத்தில் பார்க்கவும் ஏற்றுக்கொள்ளவும் செய்தார். தெலுங்கு ரசிகர்களும் என்னை அப்படியே உணரவைத்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இயக்குநர் ஹனு ராகவ்புடி இயக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா உள்ளிட்ட பலரது நடிப்பில உருவாகியிருக்கும் திரைப்படம் ‛சீதாராமம்’. தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக நேற்றைய தினம் (ஆகஸ்ட் 5) திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது சீதாராமம் திரைப்படம் குறித்தான வசூல் விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. அதன் படி சீதாராமம் திரைப்படம் உலக அளவில் வெளியான 3 நாட்களில் 25 கோடி வசூல் செய்துள்ளது. முன்னதாக சென்னையில் சீதாராமம் திரைப்படம் வெளியான அன்றைய தினம் 7 லட்சம் ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.