2021ம் ஆண்டு ஆணழகனுக்கான மிஸ்டர் வேர்ல்ட் போட்டி நடைபெற்றதில் பட்டம் வென்றவர் மணிகண்டன். இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ் உள்ளனர். அவரின் ஒவ்வொரு வீடியோவையும்  மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் பார்த்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள். அவர் மக்களுக்கு செய்து வரும் உதவிகளை பலரும் பாராட்டி கமெண்ட் அளித்து வருகிறார்கள். இப்படி நல்லவராக காட்டிக்கொள்ளும் மணிகண்டன் மீது ஏராளமான பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி அடித்து உதைத்து துன்புறுத்தியதாக சொல்லி அவரது மனைவி மற்றும் பல பெண்கள் போலீசில் புகார் அளித்து இருந்தாலும் அவரிடம் இருந்து தப்பித்தால் போதும் என ஓடிய பல பெண்களும் உள்ளார்கள் என கூறப்படுகிறது.   


காட்டுப்பாக்கத்தை சேர்ந்த பாடி பில்டரான 30 வயதான மணிகண்டன் என்பவர் அந்த பகுதியில் ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார். மணிகண்டன் மீது ஏற்கனவே பல பெண்கள் புகார் பதிவு செய்துள்ள நிலையில் மீண்டும் அவர் மீது புகார் அளித்துள்ளார் அவரின் மனைவியான கவிதா. 2019ம் ஆண்டு கவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மணிகண்டன்.


 2021ம் ஆண்டு காதலிக்குமாறு ஏமாற்றி ஒரு பெண்ணை அடித்து துன்புறுத்திய காரணத்திற்காக கைது செய்யப்பட்டார் மணி. பின்னர் தனது மனைவி மூலம் பெயிலில் வெளியே வந்தார் என கூறப்படுகிறது. 


 



 


ஏற்கனவே மணியின் மனைவி கவிதா போலீசில் புகார் அளிக்க சென்ற இடத்தில் போலீசார் அவரின் புகாரை ஏற்று கொள்ள மறுத்துள்ளனர். கவிதாவை மிரட்டி புகாரை வாபஸ் வாங்க வைத்துள்ளார் மணி. அதனால் மனம் நொந்துபோன கவிதா ஒரு மாதத்திற்கு முன்னர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்போது மீண்டு வந்துள்ள கவிதா, எஸ்ஆர்எம்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐபிசியின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் மணி மீது வழக்கு பதிவு செய்துள்ளார். 


இந்த புகார் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் "சமீபத்தில் மணிகண்டன் ஒரு வீடியோவில் வேறு ஒரு பெண்ணை தன்னுடைய மனைவி என கூறியதாக கவிதா புகாரில் தெரிவித்துள்ளார். இதற்கு கவிதா எதிர்ப்பு தெரிவித்ததால், கடனை அடைப்பதற்காக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கவிதாவிடம் தெரிவித்துள்ளார் மணி. இது தவிர மேலும் பல பெண்களுடன் மணி தொடர்பில் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார் கவிதா"  என கூறி இருந்தார் அந்த போலீஸ் அதிகாரி. தற்போது தலைமறைவாக இருக்கும் மணிகண்டனை போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மணி காதலித்து ஏமாற்றிய சந்தியா என்ற பெண் யூடியூபில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருந்தார். ஆனால் அந்த வீடியோவை பவுன்சர்களை வைத்து மிரட்டி சேனலை விட்டே எடுக்க வைத்துள்ளார் மணிகண்டன் என கூறப்படுகிறது. தற்போது நிபந்தனை பெயிலில்  வெளியே இருக்கும் மணி அதே போல தான் இப்போதும் பல பெண்களை ஏமாற்றி சுற்றி வருவதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சந்தியா என்ற பெண் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.