சுதந்திர போராட்ட வீரரின் மகனாக பிறந்து, முற்போக்கு நாடகச் செயல்பாடுகளின் மீது, தான் கொண்டிருந்த தீரா காதலின் காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி, நாடக செயல்பாடுகளிலும் சினிமா உலகிலும், என்று இரண்டு துறையிலும் பெரும் வீச்சோடு சாதித்ததோடு, பெரியாரின் போர்வாளாக விளங்கிய நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 45-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.


செப்டம்பர் 17-ஆம் தேதியான இன்று தமிழ்நாட்டின் பகுத்தறிவு ஒளியாக, எல்லைச்சாமியாக காத்து நிற்கும், தந்தை பெரியாரின் பிறந்த தினம் கொண்டாடப்படும் வேளையில் அவரது போர்வாளாக வாழ்ந்து மறைந்தவர் எம். ஆர். ராதா. நாடக உலகின் தன்னிகரற்ற ஸ்டார் கலைஞன், நம்பிக்கை நல்கும் தனிப்பெரும் கலைஞன், பெரியாரின் சுயமரியாதைக் கருத்துக்களுக்கான பிரச்சார பீரங்கி, எவரின் கருத்துக்களுக்கும் வளைந்து கொடுக்காத திட மனதுக்காரர், அரசியலில் கலகக்காரர்.. அவர்தான் எம்.ஆர்.ராதா.


எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் தோட்டத்தில், துப்பாக்கியில் சுட்டுவிட்டு, தன்னை தானும் சுட்டுக்கொண்டார் என்ற ஒரு தகவல் பரவியது. நாடு போற்றும் கலைஞன் சுடப்பட்டதாக வந்த தகவலில், எல்லோரும் அல்லோலகல்லோலப்பட்டார்கள். இதற்காக 7 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனையையும் அவர் அனுபவித்தார். பிறகு சிறையில் இருந்து வந்தபின்னர், நண்பர்கள் இருவரும் துப்பாக்கியால் விளையாடிக் கொண்டிருந்தோம். என்ன வேதனை இது.. துப்பாக்கி கண்டுபிடிச்சு இருக்காங்க.. நானும் சாகல, ராமச்சந்திரனும் சாகல எல்லாமே டூப்ளிகேட்.. என்று நகைச்சுவையாக கூறியிருந்தார் என்னும் தகவல் உள்ளது.


எம்.ஆர்.ராதாவிற்கு ஏட்டுக்கல்வி அவ்வளவாக இல்லையென்றும், பெரிய பெரிய வசனமாக இருந்தாலும் யாரையாவது வாசிக்கச் சொல்லி அதை அவர் மனப்பாடம் செய்துகொண்டு, தனக்கேற்றாற்போல தன் சுருதி, ஏற்ற இறக்கங்களுடன், தன் கருத்துக்களையும் சேர்த்து மேம்படுத்திப் பேசுவார் என்பதுதான் அவரது தனிச்சிறப்பு. ரத்த கண்ணீர், பாவமன்னிப்பு, பாகப்பிரிவினை, பாலும் பழமும், பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா, பாவமன்னிப்பு, தாய் சொல்லை தட்டாதே, பெரிய இடத்துப் பெண் உள்ளிட்ட 118 படங்களில் தனது திறமையான நடிப்பு மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எம்.ஆர்.ராதா.


1963ஆம் ஆண்டில் 22 படங்களில் நடித்து சாதனை படைத்தார். மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களை, அன்பின் மதிப்பின் காரணமாக கலைஞர்.கருணாநிதி என்று பட்டம் கொடுத்து, முதலில் அழைத்தது எம்.ஆர். ராதாதான்.


மூடப்பழக்கங்களை, பிற்போக்குச் சிந்தனையை வலுவுடன் இடித்துரைத்து, கிண்டல், கேலி, நக்கல், நையாண்டியுடன் அவர் பேசிய பகுத்தறிவு கருத்துக்கள், பொதுமக்களிடமும் அச்சிந்தனையைக் கொண்டு வந்தது. இதிகாசங்களையும், புராண கதைகளையும், மத சடங்குகளையும், பிற்போக்குத்தனத்தையும் நாடகங்களையும் விமர்சிப்பது பெரியாரின் வழக்கம். அதை அப்படியே நாடகச் செயல்பாடுகளில் விமர்சித்து நாடகக் கலையேற்றுவது எம்.ஆர்.ராதாவின் வழக்கம். இதனால் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் தன் பிரச்சார நோக்கத்தைத் தொடர்ந்து செய்தபடியே இருந்தார்.


1979-ஆம் ஆண்டு வெளிவந்த பஞ்சாமிர்தம் திரைப்படம்தான் அவரது கடைசியான படைப்பாக அமைந்தது. நாடகம், அரசியல், பிரச்சாரம் என்று அதிவேகமாக செயல்பட்ட எம்.ஆர்.ராதாவுக்கு உடல்நலம் குன்றியது. மஞ்சள் காமாலை நோயும் தாக்கவே உடல்நிலை மிகவும் மோசமானது. பெரியாரின் போர்வாளாக விளங்கிய எம்.ஆர்.ராதா, பெரியாரின் 100-வது பிறந்த நாளான 1979-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி மரணமடைந்தார். இன்று அவரது நினைவைப் போற்றுவோம்.