ராயன்


தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் கடந்த ஜூலை 26-ஆம் தேதி வெளியானது. காளிதாஸ் ஜெயராம் , சந்தீப் கிஷன் , அபர்ணா பாலமுரளி , துஷாரா விஜயன் , செல்வராகவன் , எஸ்.ஜே.சூர்யா , பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்தது. தனுஷின் 50-வது படமாக வெளியான ராயன் படம் ஆக்‌ஷன் எமோஷன் என ரசிகர்களை கவர்ந்து 100 கோடிக்கும் மேலான திரையரங்கில் வசூல் செய்தது. தனுஷ் நடித்து வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் எடுத்த படமும் ராயன் படமே . 


வழக்கமாக தனது நடிப்பிற்காக பாராட்டப்படும் தனுஷ் இப்படத்தில் நடிகராகவும் இயக்குநராகவும் பாராட்டுக்களைப் பெற்றார். ராயன் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறன் நடிகர் தனுஷுக்கு கூடுதல் சம்பளமாக இரண்டு காசோலைகளை வழங்கியுள்ளார்.


ஒரு காசோலை நடிகர் தனுஷை பாராட்டும் விதமாகவும் இன்னொரு காசோலையை இயக்குநர் தனுஷை பாராட்டும் விதமாகவும் அவர் வழங்கியுள்ளார். 






முன்னதாக ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து  நடிகர் ரஜினிகாந்த் , இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய மூவருக்கும் சொகுசு கார்களை பரிசாக வழங்கினார் கலாநிதி மாறன்.


மேலும் அப்படத்தில் பணியாற்றியவர் ஒவ்வொருவருக்கும் தங்க நாணையம் வழங்கப்பட்டது. தற்போது ராயன் படத்திற்கு தனுஷைத் தொடர்ந்து அடுத்தடுத்து படக்குழுவிற்கு பரிசு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.