சமூக வலைத்தளம் என்பது வித்தியாசமான மனிதர்கள் நடமாடு பகுதி. ஒருபக்கம் மிக எளிய மனிதர்களைச் சிகரத்தில் ஏற்றுவதும், மறுபக்கம் பிறரின் இறப்பு குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதும் என இருவேறு துருவங்களான மனிதர்களையும் நாம் இணையத்தில் பார்க்க முடியும். கடந்த காலங்களில் பல்வேறு பிரபலங்கள் இறந்துவிட்டதாகப் போலியான செய்திகளைப் பலரும் பார்த்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட பிரபலங்களே தாங்கள் உயிரோடு இருப்பதாக செய்தி வழங்கியதும் நிகழ்ந்திருக்கிறது. இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார் பிரிட்டிஷ் நடிகர் ரோவன் அட்கின்சன்.


பிரிட்டிஷ் நடிகர் ரோவன் அட்கின்சன் அவரது சொந்தப் பெயரால் வழங்கப்படுவதைவிட அவர் நடித்த பிரபல கதாபாத்திரத்தின் மூலம் சர்வதேச புகழ் பெற்றவர். அவரது `மிஸ்டர் பீன்’ என்ற காமெடி கதாபாத்திரம் உலகப் பிரபலம் கொண்டது. கடந்த நவம்பர் 23 அன்று காலை, நடிகர் ரோவன் அட்கின்சன் உயிரிழந்ததாகப் போலியாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோவன் அட்கின்சன் இறந்ததாகப் பல ஆண்டுகளுக்கு முன் பரவிய போலிச் செய்தி ஒன்று இன்று காலை பரவியதால் பல்வேறு ரசிகர்கள் இதன் உண்மைத் தன்மையை அறிய ட்விட்டரை நாடினர். இதனால் இந்த விவகாரம் ட்விட்டரில் வைரலாகியுள்ளது. 



ரோவன் அட்கின்சன்


நடிகர் ரோவன் அட்கின்சன் கார் விபத்தில் மறைந்ததாக வதந்தி கிளம்பியது. இந்தத் தகவல் `ஃபாக்ஸ் நியூஸ்’ தளத்தின் போலி ட்விட்டர் கணக்கு ஒன்றில் முதன்முதலாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், `மிஸ்டர் பீன் கதாப்பாத்திரத்தால் புகழ்பெற்ற நடிகர் ரோவன் அட்கின்சன் கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அவருக்கு வயது 58’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்தத் தகவல் இவ்வாறு இருக்க, நடிகர் ரோவன் அட்கின்சனின் தற்போதைய வயது 66. இந்தத் தகவல் பிழையால், இந்தச் செய்தி போலியானது எனவும், மிஸ்டர் பீன் உயிருடன் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் ஆனந்தம் கொண்டனர். 


`மிஸ்டர் பீன்’ நடிகர் ரோவன் அட்கின்சன் உயிரிழந்ததாகப் போலிச் செய்திகள் பரவுவது இது முதல் முறையல்ல. கடந்த 2016ஆம் ஆண்டு, பேஸ்புக் தளத்தில் `RIP ரோவன் அட்கின்சன்’ என்ற தலைப்போடு ஒரு பக்கம் தொடங்கப்பட்டு, அதில் ரோவன் அட்கின்சன் தன் வீட்டில் மயங்கிக் கிடந்ததாகப் போலிச் செய்தி வெளியாகி வைரலானது. 



ரோவன் அட்கின்சன்


கடந்த 1990ஆம் ஆண்டு, `மிஸ்டர் பீன்’ வேடத்தில் முதலில் நடித்தார் நடிகர் ரோவன் அட்கின்சன். இந்தத் தொடர் உலகின் மிகவும் நகைச்சுவையான தொடர்களுள் ஒன்றாக விரைவில் மாறியதோடு, இன்றும் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது. மேலும், `மிஸ்டர் பீன்’ தொடர் அனிமேஷன் வடிவத்திலும், இதே கதாபாத்திரம் இரண்டு திரைப்படங்களிலும் உருவாக்கப்பட்டு வெளிவந்து, அதுவும் பெரும் மக்கள் ஆதரவைச் சர்வதேச அளவில் பெற்றது. 


`ஜானி இங்க்லீஷ்’ என்ற படத் தொடரில் ரகசிய உளவாளியாக நடித்துள்ள ரோவன் அட்கின்சன் அந்தப் படத்திற்காகவும் பாராட்டப்பட்டுள்ளார். மேலும், `பீக்கி பிளைண்டர்ஸ்’ என்ற பிரபலமான ஆங்கிலத் தொடரின் அடுத்து வெளியாகவுள்ள ஆறாவது சீசனில் ஜெர்மானிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் வேடத்திலும் நடித்துள்ளார் ரோவன் அட்கின்சன்.