தியாகராஜா குமாரராஜ இயக்கிய மாடர்ன் லவ் சீரிஸில் இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கிய நினைவோ ஒரு பறவை படத்தில் கதாநாயகன் கே மற்றும் கதாநாயகி சாம் ஆகிய இருவருக்கு இடையில் ஒரு சின்ன உரையாடல் நடக்கும்
சாம் : ”நான் ஒரு ஆணாக பிறந்திருந்தால் உனக்காக நான் gay ஆக மாறியிருப்பேன்
கே: “ நானும் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உனக்காக நான் lesbian ஆக மாறியிருப்பேன்தான்
சாம்: இல்லை… பெரும்பாலானப் பெண்களும் மற்றப் பெண்களின் உடலை ரசிக்கிறார்கள். ஆனால் ஒரு ஆண் இன்னொரு ஆணின் உடலைக் கண்டு அசெளகரியமாகவே உணர்கிறார்கள். அதனால் நான் உன்மேல் வைத்திருக்கும் காதல் நீ என்மேல் வைத்திருப்பதை விட பெரிது என சொல்கிறேன்.
இயக்குனர் wong kar wai இயக்கியப் படம் happy together.
Happy together
ஃபாய் மற்றும் ஹோ ஆகிய இரு ஒருபாலீர்ப்புக் கொண்ட காதலர்கள் ஹாங்காங்கில் இருந்து தங்களது வாழ்க்கையை புதிதாகத் தொடங்கும் திட்டத்தில் அர்ஜெண்டினா வந்து சேருகிறார்கள் ஆனால் இருவருக்கும் இடையிலான உறவு முறிந்து பிரிந்துவிடுகிறார்கள். மறுபடியும் தங்களது வீட்டிற்கு செல்ல பணமில்லாமல் ஒரே நகரத்தில் வெவ்வேறு சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். ஒருவரை ஒருவர் வெறுக்கவும் முடியாமல் சகித்துகொள்ளவும் முடியாமல் இவர்களுக்கு இடையில் நடக்கும் ஊடாட்டம்தான் படத்தின் பெரும்பகுதி.
காதல் என்பது யார் இரண்டு நபர்களுக்கு நடுவில் நிகழ்ந்தாலும் அதில் ஒரே வகையான உணர்வுகளை தான் நாம் அனைவரும் எதிர்கொள்ளபோகிறோம். நேசிப்பது, நேசிக்கப்படுவது, ஏமாற்றப்படுவது, மன்னிப்பது, மீண்டும் ஏமாற்றப்படுவது, மீண்டும் மன்னிப்பது என இது தொடர்ந்துகொண்டே இருக்கிறது இல்லையா….அதில் ஒரு சலிப்பும் ஏற்படுகிறது….இருந்தாலும் மீண்டும் அதே உறவிற்குள் தான் செல்கிறோம். ஹோ மற்றும் ஃபாய் ஆகிய இருவரின் காதலும் இத்தகையது தான். ஆனால் இதற்கெல்லாம் முடிவு என்ற ஒன்று இருக்க வேண்டும் இல்லையா. அது படத்தின் க்ளைமேக்ஸைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு ஆண் இன்னொரு ஆணை கட்டிப்பிடித்து அழும் எத்தனை காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி ஒரு காட்சி உங்கள் மனதில் தோன்றினால் அந்த காட்சியில் நடிகர்கள் நிச்சயம் மதுபோதையில் தான் இருப்பார்கள். மலையாளத்தில் கும்பலங்கி நைட்ஸ் மற்றும் வெயில் ஆகிய இரு படங்களில் இதனை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
தொடக்கத்தில் தியாகராஜா குமாரராஜா படத்தில் சாம் சொல்வதுபோல் ஆண்கள் ஆண்களின் பலவீனங்களை கண்டு அசெளகரியப்படுகிறார்கள். இரண்டு ஆண்களுக்கு இடையிலான காதலைப் பற்றிய ஒரு படத்தை எதிர்பாலீர்ப்புக் கொண்ட எத்தனை ஆண்களால் முகம் சுழிக்காமல் பார்க்க முடியும்
இயக்குநர் வாங் கார் வாய் படங்களில் வரும் ஆண்கள் பலமீனமானவர்களாக இருப்பதுதான், அவரது கதாபாத்திரங்களோடு நாம் ஒன்ற முடிவதற்கான காரணம்.