காட்டில் ஒரு வண்டு ஒரு பூவைக் காதலித்து வந்தது. அந்தப் பூவின் உயிரை ஒரு தேனி எடுத்துசென்று தன் கூட்டில் நிரப்பியது. தேடிச்சென்று அந்த தேன் கூட்டை நேசித்து வந்தது வண்டு. தேனை கொத்தி தின்றது பருந்து ஒன்று. தூரதேசத்தின் மலை ஒன்றில் தனது கூட்டில் முட்டையிட்டது. இப்போது பூவை மனதில் வைத்து அந்த முட்டைகளை அடைகாத்து வருகிறது அந்த வண்டு.


LAWRENCE ANYWAYS


பிரெஞ்சுத் திரைப்பட இயக்குநரான ஸேவியர் டோலன் எழுதி  இயக்கியத் திரைப்படம் லாரன்ஸ் எனிவேஸ். காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் லாரென்ஸ் மற்றும் அவரது மனைவி ஃப்ரெட். இருவரும் ஒருவரை ஒருவர் அபரிமிதமாக நேசிக்கிறார்கள். தனது 35-வது பிறந்தநாள் அன்று தனது மனைவியிடம் ஒரு ரகசியத்தைத் தெரிவிக்கிறார் லாரன்ஸ். தான் பிறப்பில் இருந்தே தன்னை பெண்ணாக உணர்பவர் என்றும் ஒரு பெண்ணாக தான் மாற ஆசைப்படுவதாகவும் சொல்கிறார்.




 


திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து உங்களது கணவன் உங்களிடம் இப்படிச் சொன்னால் நீங்கள் அதனை எப்படி எதிர்கொள்வீர்கள். முதலில் லாரன்ஸுடன் சண்டையிடுகிறார் ஃப்ரெட். இருவரும் சில காலம் பிரிந்து இருக்கிறார்கள். பின் மனமாற்றமடைந்து லாரன்ஸிற்கு உதவி செய்ய முன்வருகிறார் ஃப்ரெட். பெண்  ஆடைகளை அணிந்துகொள்வது முக அலங்காரம் செய்துகொள்வது என அவரை அழகு பார்க்கிறார் ஃப்ரெட். கல்லூரி ஆசிரியராக இருக்கும் லாரன்ஸை ஒரு நாள் பெண் உடை அணிய வைத்து வழியனுப்பி வைக்கிறார் ஃப்ரெட்




 


இந்தப் படத்தின் மிகச் சிறந்த காட்சிகள் ஒன்று பெண் அடையாளத்துடன் லாரன்ஸ் தனது வேலைக்குச் செல்கிறார். வீதியில் அவரை வெறுப்புடன் பார்க்கிறார்கள் மக்கள். தங்களது குழந்தைகளின் கண்களை மூடிக்கொள்கிறார்கள் பெற்றோர்கள். எதையும் சட்டை செய்யாமல் நடந்துசெல்கிறார் லாரன்ஸ்.  கலகலப்பாக இருக்கும் வகுப்பு அவர் உள் நுழைந்தவுடன் மயான அமைதியாக மாறுகிறது. அனைவரின் முன்னாள் தயக்கத்துடன் நிற்கிறார் லாரன்ஸ். மாணவர்களிடையே எந்த சலனமும் இல்லை நேற்றுவரை  தங்களது ஆசிரியரை ஒரு ஆணாக பார்த்த அவர்கள் லாரன்சை அதிர்ச்சியில் பார்த்தபடி இருக்கிறார்கள். இக்கட்டான இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாத தவிப்பை நம்மால் உணரமுடியும். அப்போது முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் பெண் தனது கையை உயர்த்துகிறார்.  நேற்று நடத்திய பாடத்தில் தனக்கு குழப்பம் இருப்பதாகவும் அதை தனக்கு விளக்க முடியுமா என்று கேட்கிறார். பின்னணி இசை தொடங்குகிறது. லாரன்ஸின் முகம் மலர்கிறது.


லாரன்ஸ் ஒரு பெண்ணாக தனது வாழ்க்கையை தொடர்கிறார். ஃப்ரெட் மற்றொருவரை மணந்துகொண்டு ஒரு குழந்தையும் பெற்றுக் கொள்கிறார்.


வண்டும் பூவும்


  நாம் நேசித்து நமது  வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்ட  ஒருவர் ஆணாக இருந்து பெண்ணாக மாறினால் அவர்மீது  நாம் வைத்த காதல் இல்லாமல் ஆகிவிடுமா… ஃப்ரெட் என்கிற அந்த வண்டு, லாரன்ஸ் என்கிற அந்தப் பூவை எத்தனை காலம் ஆனாலும் நேசிக்கவே செய்யும்.