ஒரு தந்தையாக நீங்கள் இருந்தால் உங்கள் மகனோ, மகளோ உங்களிடம் வந்து தான் ஒரு ஒருபாலீர்ப்புக் கொண்டவர் என்று சொன்னால் என்ன செய்வீர்கள். உங்களது தங்கை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தவர், தான் ஒரு ஆணாக உணர்வதாக உங்களிடம் மட்டும் தெரிவித்தால் அவரை எப்படி எதிர்கொள்வீர்கள். திருமணமாகி ஒருவரை கணவனாக ஏற்றுக்கொண்டு அவருடம் ஒரு 10 ஆண்டுகள் கழித்து அவர் ஒரு பெண்ணாக தன்னை உணர்வதாக உங்களிடம் தெரிவித்தால் ஒரு மனைவியாக நீங்கள் என்ன செய்யமுடியும் ?


தி தானிஷ் கர்ல் ( the Danish girl)


ஜெர்டா  என்கிற பெண் ஒரு ஓவியர். ஒரு  ஓவியம் வரைவதற்காக தனது கணவன் எய்னரை பெண் வேடமிட்டு மாடலாக நிற்கச்சொல்கிறார். பெண் வேடமிட்டு நிற்கும் தருணத்தில் எய்னர் தன்னை நிஜமாகவே ஒரு பெண்ணாக உணர்கிறார். இதனை தன் மணைவியிடம் அவர் தெரிவிக்கிறார். ஜெர்டா தனது கணவனது  அடையாளத்தை ஏற்றுக்கொண்டு ஒரு பெண்ணாக மாறுவதற்கு அவருக்கு உதவிசெய்கிறார். இந்தப் பயணத்தில் இருவரும் நிறைய சவால்களை எதிர்கொள்கின்றார்கள். தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்ட ஒருவர் தனக்கு சொந்தம் இல்லை என தெரிந்த பின்பு அந்த உண்மையை ஏற்றுக்கொண்டு மேலும் அவர் எதிர்கொள்ளும் கஷ்டங்களில் உடன் நிற்பது ஒரு படத்தில் மட்டுமே சாத்தியம் என்று நீங்கள் நினைத்தால் கூடுதலான ஒரு தகவல் சொல்கிறேன்.


தானிஷ் கர்ல் திரைப்படம் நிஜ மனிதர் ஒருவரின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதுதான். லிலி எல்பே என்கிற பிறப்பில் ஆணாக பிறந்து தன்னை பெண்ணாக உணர்ந்து பெண்ணாக தன்னை மாற்றிக்கொண்டவர். தனத பாலினத்தை அடையாளம் கண்டுகொண்ட லிலி எல்பே தன்னை பெண்ணாக மாற்றிக்கொள்ள அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதல் திருநங்கை லிலி எல்பே. ஆனால் இந்த சிகிச்சை பல்வேறு உடல்ரீதியான சிக்கல்களை உருவாக்கியது. இதன் காரணத்தினால் லிலி உயிரிழந்தார்.


 ஓரளவிற்கு பால்புதுமையினர் தங்களது உரிமைகளைப் பேசத் தொடங்கியிருக்கும் இன்றையச் சூழலில் ஒருவர் தன் பிறப்பிற்கு மாறாக எதிர் பாலினமாக அடையாளமாக கண்டபின் தனது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள எத்தனை சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் எந்த வித முன்னுதாரணமும் இல்லாமல் தனது பாலின அடையாளத்தை இந்த சமூகத்தில் வெளிப்படுத்த எவ்வளவு பெரிய மனவலிமை தேவைப்பட்டிருக்கும் என நாம் யோசித்து பார்ப்பது அவ்வளவு சிரமமானதாக இருக்காது.


இந்தப் படத்தில் மனைவியாக நடித்த அலிசியா விகாண்டருக்கு சிறந்தத் துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. உண்மையான ஜெர்டாவிற்கு நமது விருது வழங்கப்படவில்லை என்றாகும் நமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ளலாம்.