பெண்கள் குறித்து தமிழ் சினிமா கட்டமைத்த அத்தனை கற்பிதங்களையும், நிஜத்தில் கடவுள் பெயரைச் சொல்லி பெண்கள் மீது அரங்கேற்றப்பட்ட அத்தனை அவலங்களையும், தனியொருத்தியாய் அடித்துத் துவைத்திருக்கிறாள் அயலி. 


1990களில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரத்தில் இருக்கும் வீரப்பண்ணை என்னும் கிராமத்தில் நிகழும் கதையே இந்த அயலி. இந்த கிராம மக்கள் பல நூறு ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயங்களையும் கட்டுப்பாடுகளையும் கைவிடாமல் வாழ்கின்றனர். மக்களை வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்கிறது அங்கே இருக்கும் பழமைவாதச் சிந்தனைகளைக் கொண்ட கும்பல். 


பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் படிக்கக் கூடாது, கோயிலுக்குள் செல்லக் கூடாது, உடனே திருமணம் செய்ய வேண்டும் என்றெல்லாம் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். அதையும் மீறி 13 வயதுச் சிறுமி தமிழு (தமிழ்ச் செல்வி) படிக்க நினைக்கிறாள். தன்னைப் பற்றி மட்டும் யோசிக்காமல், தன் சக தோழிகளின் வாழ்க்கையிலும் ஒளியேற்ற ஆசைப்படும் தமிழின் கனவு என்ன ஆனது என்பதே கதை. 




கதையில் வரும் ஒவ்வொருவரின் இயல்பான நடிப்பும், பாத்திர வார்ப்புகளும் நம்மை ஈர்க்கின்றன. ஒட்டுமொத்தக் கதையையும் தன் முகத்தில் தாங்கி நிற்கிறார் தமிழ்ச் செல்வியாக வரும் அபி நட்சத்திரா. மகிழ்ச்சி, அழுகை, கோபம், ஏமாற்றம், அச்சம் என அத்தனை உணர்ச்சிகளும் அவரிடம் செயற்கைத் தனமில்லாமல் வெளிப்படுகின்றன. 


தமிழின் சக வயதுத் தோழிகள் மைதிலி, கயலின் கதாபாத்திரங்களும் காத்திரத்துடன் கையாளப்பட்டுள்ளன. பாவாடை சட்டையில் 8ஆம் வகுப்புப் படிக்கும் சிறுமி மைதிலி, வயதுக்கு வந்து, கட்டாயத் திருமணம் செய்விக்கப்பட்டு, குடும்ப வன்முறைக்கு ஆளாகி, குழந்தை பெற்று, குடிகாரக் கணவனை இழந்து, வயிற்றில் கருவுடன், "இப்போ நான் என்னமா பண்ணனும்" என்று நிற்கும் காட்சி வரை பல பரிமாண நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  




தமிழின் தாய் குருவம்மாளாக அனு மோல் வாழ்ந்திருக்கிறார். மகளின் புரட்சிகரமான பேச்சை, செயல்களை ஜீரணிக்க முடியாமலும், ஊர் மக்களை எதிர்கொள்ள முடியாமலும் படும் பாட்டை அப்படியே கடத்தி இருக்கிறார். அவரின் மலையாளம் கலந்த பேச்சு ரசிக்க வைத்தாலும், புதுக்கோட்டை மண்ணின் மொழியோடு ஒட்டாமல் தனித்து நிற்கிறது. 


கதையில் சச்சினின் வசனங்கள் கவனம் ஈர்ப்பதோடு, காத்திரமாகவும் இருக்கின்றன. உதாரணத்துக்கு, 
ஊட்டுல சும்மா படுத்திருக்கேனா... நான் பாக்குற வேலைக்கு எல்லாம் சம்பளம் பேசலாம் வர்றியா?


உங்க அறிவுக்கு எது சரின்னு தோணுதோ, அதை மட்டும் பண்ணுங்க!


உனக்கு உண்டானதை நீதான் பாத்துக்கணும்!


சாதாரணமான விஷயத்துக்காகக் கூட உயிரக் கொடுத்து போராட வேண்டியிருக்கு! 


நம்ம பேச்சையும் மனசையும் யார் கேட்கப் போறா?


நம்ம வீட்டுக்குள்ள என்ன நடக்கணும்னு முடிவு பண்றதுக்கு இவனுங்க யாரு...? 


எங்க ஊர்ல இருக்குறதெல்லாம் பழக்க வழக்கமே இல்ல, பைத்தியக்காரத் தனம்..! 


முதுகுக்குப் பின்னாடியே பார்த்துட்டு இருந்தோம்னா, முன்னாடி போக முடியாது..!


நான் எப்படி இருக்கணும்னு நான்தான் முடிவு பண்ணுவேன்..! என பிரச்சார நெடி இல்லாமல் வசனங்கள் ஒவ்வொன்றும் தெறிக்க வைக்கின்றன. 




தமிழ்ச் செல்வியின் தோழி மைதிலியின் அம்மாவாக காயத்ரி கிருஷ்ணன், கயலின் தாயாக மெலடி டார்கோஸ் ஆகியோரின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. தமிழின் தந்தை வேடத்தில் மதன் குமார் கச்சிதமாய்ப் பொருந்துகிறார். ஊர் பண்பாடு, கவுரவத்துக்கும் உயிர் மகளின் பாசத்துக்கும் இடையில் ஊசலாடும் தந்தையின் பாத்திரத்தில் உணர்வுகளைக் கடத்திச் செல்கிறார். 


தமிழின் தலைமை ஆசிரியர் உடையும் குரலும் வழிகாட்டலும் அத்தனை நேர்த்தி. பழமைவாத கணித வாத்தியாராய் நடித்திருக்கும் ஸ்ரீனிவேசனைத் திரையில் பார்க்கும்போதே எரிச்சல் கவ்விக் கொள்கிறது. எதிர்மறைக் கதாபாத்திரத்தில் வரும் சிங்கம்புலி, லிங்காவின் பாத்திர வார்ப்புகள் அசலாக இருக்கின்றன. திருடனாக வரும் ஜென்சன் திவாகரனின் காமெடி சரவெடிகள், திரையோட்டத்தின் சரளத்தைக் கூட்டுகின்றன.


ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் கேமரா, வீரப்பண்ணை கிராமத்துக்குள் நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று, கண்ணெடுக்காமல் அங்கேயே உட்கார்த்தி வைக்கிறது. 


மனைவியை அடித்துத் துன்புறுத்துவது, குழந்தை இல்லாத காரணத்தால், மனைவியின் தங்கையான 14 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்ய முன்வருவது என கதையில் நிஜங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


கிராமமே தெய்வமாக வழிபடும் அயலியும், பாதிக்கப்பட்ட ஓர் அபலைப் பெண்ணாக இருக்கலாம் என்னும் இடத்தில் இயக்குனரின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது.




அயலி பேசும் புரட்சியின் பட்டியல் பெரிது. பெண் கல்வி, மாதவிடாயின் மூட நம்பிக்கைகள், தெய்வத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால் நடக்கும் அடக்குமுறைகள், குழந்தைத் திருமணம், குடும்ப வன்முறை, தாலி சென்ட்டிமெண்ட் என, அயலி பெண்கள் சார்ந்த பெரும்பாலான பிரச்சினைகளைக் காத்திரமாகப் பேசுகிறாள். 


குல தெய்வ வழிபாட்டை வைத்து காந்தாரா போன்ற கமர்ஷியல் படங்களை மட்டுமல்ல, இதுபோன்ற சமூகத்துக்கு மிக அவசிய, அவசர கருத்துகளையும் சொல்ல முடியும் என்பதை இயக்குநர் நிரூபிக்கிறார்.


கைகளைக் கட்டி கட்டாயத் தாலி கட்டப்பட்ட பிறகு, தாலியைக் கழற்றி, கட்டியவனின் முகத்தில் வீசி, பளாரென்று அயலி கொடுத்த அறை, அவனின் கன்னத்தில் மட்டும் விழுந்த அறை அல்ல. கழுத்தில் தாலி ஏறிவிட்டது என்பதற்காகவே வேறு வழியில்லாமல் கண்டவனை கணவனாக ஏற்றுக்கொள்ள வைக்கும் சமூகத்துக்குக் கொடுக்கப்பட்ட அறை..!