அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழ் சினிமாவில் கண்டிப்பாக நாம் பார்க்க வேண்டிய அம்மா கேரக்டர்களை மையப்படுத்திய படங்கள் பற்றி காணலாம். 


எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி


கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, அசின், நதியா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி”. ஜெயம் ராஜா இயக்கிய இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். கணவனால் கைவிடப்பட்ட மனைவி தன் மகனுக்காக வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்யும் அம்மா கேரக்டரில் நதியா சிறப்பாக பண்ணியிருந்தார். குறிப்பாக மகனுக்கு அம்மாவாக இல்லாமல் ஒரு தோழியாக இருக்கும் அந்த கேரக்டர் தமிழ் சினிமாவுக்கே புதிதாக இருந்தது. 



ராம்


2005 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் ஜீவா, கஜாலா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடிப்பில் வெளியான படம் “ராம்”. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படம் தமிழில் சிறந்த அம்மா - மகன் பாசத்தை மையப்படுத்திய படங்களில் ஒன்றாகும். சிங்கிள் பேரண்ட் ஆக மகனை வளர்க்கும் அம்மாவாக நடித்த சரண்யாவுக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 



கன்னத்தில் முத்தமிட்டால் 


2002 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ் என பலரும் நடித்த படம் “கன்னத்தில் முத்தமிட்டால்”. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் குழந்தையின் உண்மையான அம்மா,வளர்ப்பு அம்மா இடைப்பட்ட அன்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. கிட்டதட்ட 6 தேசிய விருதுகள், மாநில அரசு விருதுகள் குவித்ததோடு பாராட்டுகளையும் பெற்றது. 


 



வேலையில்லா பட்டதாரி 


2014 ஆம் ஆண்டு வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி என பலரும் நடித்த படம் “வேலையில்லா பட்டதாரி”. அனிருத் இசையமைத்த இப்படத்தில் இடம் பெற்ற அம்மா சென்டிமென்ட் காட்சிகள் இன்றைய இளம் தலைமுறையின் பேவரைட் ஆக உள்ளது. அம்மாவாக சரண்யா தன்னுடைய வேறொரு பரிணாமத்தை காட்டியதோடு நம்முடைய வீட்டில் இருக்கும் அம்மா கேரக்டரை தான் பலருக்கும் நியாபகப்படுத்தியது. 



பிச்சைக்காரன் 


2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சாத்னா டைடஸ் நடித்த பிச்சைக்காரன் படம் அம்மாவின் சென்டிமென்ட் காட்சிகளுக்காக மிகுந்த வரவேற்பை பெற்றது. தாய் பாசத்தை மிஞ்சிய எதுவும் இல்லை, அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அந்த படத்தின் ஒன்லைன் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வைத்தது. இதில் அம்மாவாக தீபா ராமானுஜம் நடித்திருந்தார். 



குட்டிப்புலி 


2013 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் சசிகுமார், லட்சுமி மேனன், சரண்யா பொன்வண்ணன் நடித்த படம் “குட்டிப்புலி”. இந்த படத்தின் மகனின் வாழ்க்கைக்காக எதிரிகளை கொலை செய்யும் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் மிரட்டியிருப்பார். 


பாண்டி 


2008 ஆம் ஆண்டு ராசுமதுரவன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், சினேகா, சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வெளியான பாண்டி படம், வீட்டில் பந்தாடப்படும் மகனுக்கு ஆதரவாக இருக்கும் அம்மா கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.