டாம் க்ரூஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் மிஷன் இம்பாசிபள் பிரான்சைஸின் 7 ஆம் பாகத்தின் ட்ரெய்லர் வெளிவந்திருக்கிறது.முழுமையான ஒரு ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்குமென்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


மிஷன் இம்பாசிபல் திரைப்படங்களுக்கென ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.இதுவரை இந்த பிரான்சைஸில் மொத்தம் ஆறு பாகங்கள் வெளிவந்திருக்கின்றன.இந்த ஆறு பாகங்களும் அனைத்து வகையிலும் ரசிகர்களை திருப்திபடுத்தி இருக்கின்றன. ஒவ்வொரு படத்திலும் டாம் க்ரூஸ் ஏதாவது ஒரு புதிய சாதனையுடன் களமிறங்குவார். குறிப்பாக படத்தில் தான் நடிக்கும் ஸ்டண்ட் காட்சிகளை டூப் இல்லாமல் அவரே செய்துவருவது இந்தப் படங்களை ரசிகர்கள் மிக ஈடுபாட்டுடன் பார்ப்பதற்கு மற்றொரு காரணம். தற்போது மிஷன் இம்பாசிபள் படத்தின் 7-ஆம் பாகத்தின் ட்ரெய்லர் ஒரு நல்ல ஆக்‌ஷன் த்ரில்லரை ரசிகர்கள் எதிர்பார்ப்பதற்கான அனைத்து கூறுகளைக் கொண்டிருக்கிறது.


படத்தின் கதை


ஒட்டுமொத்த மனித இனத்தையே அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட ஒரு ஆயுதத்தை கைப்பற்ற நினைக்கிறது ஒரு கூட்டம். இந்த ஆயுதத்தை அவர்கள் கையில் கிடைக்காமல் அதனை முதலில் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள் ஈதன் (டாம் க்ரூஸ்) மற்றும் அவரது குழு.இந்த போராட்டத்தில் ஈதன் தன்னை துரத்தி வரும் தனது கடந்த கால பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே இந்த ட்ரெய்லரில் இருந்து நாம் புரிந்துகொள்ளக் கூடியக் கதை.


ஸ்டண்ட் காட்சிகள்


டாம் க்ரூஸ் தனது படங்களில் ஸ்டண்ட் காட்சிகளை டூப் இல்லாமல் தானே செய்ய வேண்டும் என்று உறுதியாக இருப்பவர். கடந்த பாகத்தில் ஓடும் விமானத்தில் தொங்கிக்கொண்டு அவர் நடித்த காட்சி அனைவரையும் மிரள வைத்தது. தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லரில் நிறைய ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.


முதல் காட்சியில் ஒரு பைக்கை வேகமாக ஓட்டிக்கொண்டு வரும் டாம் க்ரூஸ் ஒரு மலை விளிம்பின் நுனியில்  சென்று நிற்பதில் தொடங்கி கடைசியாக வேகமாக பைக்கை ஓட்டிச் சென்று மலையிலிருந்து கீழே குதிப்பதுவரை அத்தனை ஸ்டன்ட்களும் நம்மை வியக்கவைக்கின்றன. இந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே இணையதளத்தின் தங்களது உற்சாகத்தைப் பகிர்ந்து வருகிறார்கள்.


ஒரு ரசிகர் “டாம் க்ரூஸிற்கு 60 வயதாகிறது. ஆனால் அவர் ஒவ்வொரு படத்திற்காகவும் காட்டும் அர்ப்பணிப்புதான் இந்தப் படங்களை நான் பார்ப்பதற்கான முக்கியமான காரணமாக இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.


எதிர்கொண்ட பிரச்சனைகள்


கடும் சிரமங்களுக்குப் பிறகு இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.கடந்த 2019 ஆம் ஆண்டு கோவிட் காரணத்தினால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பின் படப்பிடிப்பின் போது படபிடிப்புக் குழுவை  டாம் க்ரூஸ் திட்டிக்கொண்டிருந்த ஆடியோ ஒன்று வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்தது. இந்த பிரச்சனைகளை எல்லாம் எதிர்கொண்டு தற்போது இந்தப் படம் வரும் ஜுலை 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.