மலையாளத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான மோகன்லால் - மம்மூட்டி இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. கோலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலகநாயகன் கமல்ஹாசன் இருவரின் நட்பைப் போலவே இவர்களின் நட்பும் மலையாள திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.
இருவருக்குமே தனித்தனியாக ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து கேண்டிட் புகைப்படங்கள் எடுத்து அதை தங்களின் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். இருவருமே மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் என்றாலும் ஒருவருக்கொருவர் சிறந்த பந்தத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது மோகன்லால் - மம்மூட்டி இருவரும் தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் கலக்கி வருகிறது. வேட்டி சட்டையில் மிகவும் சாதுவாக மம்மூட்டி நிற்க அவர் பின்னால் போன் பேசிக்கொண்டு மோகன் லால் நிற்கிறார். இருவரும் வெவ்வேறு போஸ் கொடுத்து இருந்தாலும் மிகவும் ஸ்டைலாக தோற்றமளிக்கிறார்கள். இந்தப் புகைப்படத்தை மோகன்லால் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இணையத்தில் இப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது.
மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் மம்மூட்டி தற்போது நடிகை ஜோதிகாவுடன் முதல்முறையாக 'காதல்: தி கோர்' திரைப்படம் மூலம் திரையைப் பகிர்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கன்னூர் ஸ்குவாட் படத்திலும் நடித்து வருகிறார்.
அவரின் இந்த திரைப்பயணத்தில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இன்றைய யங் ஹீரோக்களுக்கு எல்லாம் சவால் விட்டு வருகிறார் மம்மூட்டி. கடந்த ஆண்டு 'ரோர்சார்ச்', கிரிஸ்டோபர், நண்பகல் நேரத்து மயக்கம் என அடுத்தடுத்து கவனமீர்த்து மம்மூட்டி அசத்தினார்.
அதே போல நடிகர் மோகன்லாலும் 2019ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் படமான லூசிஃபரின் தொடர்ச்சியாக எம்பூரான் படத்திலும், மலைக்கோட்டை வாலிபன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனால் ரஜினிகாந்த் ரசிகர்களும் இந்த போட்டோவை அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.
மம்மூட்டி - மோகன்லால் மிக பெரிய ஸ்டார் நடிகர்களாக உயர்வதற்கு முன்பு இருந்த அதே நட்பு இன்றும் தொடர்கிறது. அவர்கள் இருவரும் அடிக்கடி சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். நட்புக்கு இலக்கணமாக இருக்கும் இந்த நடிகர்களின் நட்பை மேலும் மெருகேற்றும் விதமாக அடிக்கடி இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தி வருகிறார்கள். தற்போது வெளியாகியுள்ள இந்தப் புகைப்படம் எக்கச்சக்கமான லைக்ஸ்களையும் கமெண்ட்களையும் குவித்து வருகிறது.