பழைய வண்ணாரபேட்டை , திரெளபதி , பகாசூரன் ஆகிய படங்களை இயக்கி தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் இயக்குநர் மோகன் ஜி. ஒருபக்கம் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார்கள். மறுபக்கம் இந்த படங்களில் பேசப்படும் அரசியலுக்கு எதிர் கருத்தியலை தனது படங்களில் மோகன் ஜி தொடர்ந்து பேசி வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது அடுத்த படமாக திரெளபதி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளார். திரெளபதி படத்தில் நடித்த ரிச்சர்ட் ரிஷி இந்த படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். 14 ஆம் நூற்றாண்டில் மறைக்கப்பட்ட போசளர்களின் செந்நீர் சரிதம் என இந்த போஸ்டரில் குறிப்பிடப் பட்டுள்ளது.
திரெளபதி 2 ஃபர்ஸ்ட் லுக்
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிஷி நடித்து வரும் திரெளபதி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வித்தியாசமான முறையில் கடலுக்கு அடியில் வெளியிட்டுள்ளார்கள். "மீண்டும் திரெளபதியின் மிரட்டல் ஆரம்பம்.. தென்னகத்தை ஆண்ட ஹொய்சாள பேரரசன் மூன்றாம் வீர வல்லாளர் மற்றும் சேந்தமங்கலத்தை ஆண்ட காடவராயர்களின் வீரம், தியாகம், ஆகியவற்றுடன் வலி நிறைந்த இரத்த சரித்திரம் திரெளபதி 2.. விரைவில் திரையில் சந்திப்போம்" என படத்தின் இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்