சென்னையில் நடக்கும் ஆறு கதைகளை இல்லை ஆறு காதல் கதைகளை கொண்டது மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி. நேற்று முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி இருக்கிறது. இதில் முதல் எபிசோடான லாலாகுண்டா பொம்மைகள் இயக்குநர் ராஜு முருகனால் தழுவி, திரைக்கதை எழுதி இயக்கப்படிருக்கிறது. எப்படி இருக்கிறது லாலாகுண்டா பொம்மைகள்?
சென்னையின் லாலாகுண்டா பகுதியில் எத்தனையோ காதல் கதைகளில் இதுவும் ஒன்று. ஒருவனால் காதலித்து கருவுற்று கைவிடப்பட்டு அபார்ஷன் செய்துகொள்ளும் ஒரு பெண்ணில் இருந்து தொடங்குகிறது கதை. ஏமாற்றப்பட்ட ஒரு பெண் எப்படி உணர்வாள். ஆண்களின் மேல் , காதலின் மேல் நம்பிக்கை இழந்து மனதில் கோபத்தை தேக்கி வைத்துக்கொண்டு இருப்பார். அப்படிதான் இருக்கிறார் ஷோபா. இனிமேல் காதலிக்கவே போவதில்லை என்று நாம் முடிவு செய்தால் போதுமா? அவ்வளவு எளிதாக காதலைக் கட்டுபடுத்திவிட முடியும் என்றால் அது எப்படி காதலாக இருக்கமுடியும் . படத்தில் சாமியாராக வரும் வாசுதேவன் சொல்வதுபோல ”லவ்வால் வந்த சோகத்த லவ்வு தான் சரிபண்ண முடியும்”
மறுபடியும் காதல்வயப் படுகிறார் ஷோபா. இந்த முறை ஒரு பானி பூரிக்காரருடன். மற்றவர்களுக்கு எல்லாம் நான்கு பானி புரி வைக்கும் கடைக்காரன் ஷோபாவிற்கு மட்டும் ஆறு பானி பூரி வைத்து தனது காதலைத் தெரிவிக்கிறார். ஒரு தமிழ்ப் பெண் வட இந்திய பையனை காதலித்தால் என்ன பிரச்சனை எல்லாம் வருமோ, அதேமாதிரி ஊர்க்காரர்கள் எல்லாம் சேர்ந்து இந்தக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். இந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து பானி பூரிக்காரருடன் ஷோபா சேருகிறாரா என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த லாலாகுண்டா பொம்மைகளுக்கு இடையில் புதிதான ட்விஸ்ட் ஒன்றை சேர்க்கிறார் ராஜூ முருகன்.
ராஜு முருகன் எழுத்தில் நாம் சில விஷயங்களை எப்போதும் எதிர்பார்க்கலாம். மனிதர்களின் அனுபவத்தில் இருந்து வெளிப்படும் மிக உறுதியான வசனங்களை ஜோக்கர் படத்தில் பவா செல்லதுரை சொல்லும் வசணம் நினைவிருக்கிறதா? “ஒருத்தியோட அன்புக்கு சமானமா இந்த உலகத்துல எதுவுமே கிடையாது பையா’ அதே மாதிரி இந்தக் கதையில் வைஜெயந்தி கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வசுந்த்ரா பேசும் வசனங்கள் அமைந்திருக்கின்றன.
”உடம்புல மார்க்கும் உள்ளார நோவும் இல்லாத பொம்பள எங்க இருக்கா” மற்றும் “ஆம்பளைங்க கூட வாழ முடியாது அதே மாதிரி ஆம்பள இல்லாமலும் வாழ முடியாது” ஆகிய வசனங்கள் ராஜூ முருகன் எக்ஸ்க்லூசிவ்...
படத்தில் நாம் பார்க்கும் லாலாகுண்டாவை ராஜு முருகனின் கண்களால் பார்ப்பது மிக எதார்த்தமான அனுபவமாக இருக்கிறது. ஷோபாவின் சித்தப்பாவாக நடித்திருக்கும் எழுத்தாளர் பாக்கியம் சங்கரின் டான்ஸ் மூவ்ஸை மிஸ் செய்துவிடாதீர்கள்.
சரி கடைசியாக ஒரு கேள்வி. ஒரு பானிபூரி கடைகாரனை நீங்கள் காதலித்து அவன் உங்களை ஏமாற்றிய பின் உங்களால் மறுபடியும் பானி பூரியை ரசித்து சாப்பிட முடியுமா? பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.