காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படம் யார் மனதையும் புண்படுத்தும்படி இருக்காது என அப்படத்தின் இயக்குநர் முத்தையா தெரிவித்துள்ளார். 


ஆர்யாவின் 34வது படமாக காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் உருவாகியுள்ளது. டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில், இயக்குநர் முத்தையா இந்த படத்தை இயக்கியுள்ளார். ஹீரோயினாக  சித்தி இத்னானி நடிக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.மேலும் இந்த படத்தில் பிரபு, தருண்கோபி, ஆடுகளம் நரேன், பாக்யராஜ், தீபா, விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  பொதுவாக தன்னுடைய படங்களில் எப்போது கிராமத்து கதைகளை கையிலெடுக்கும் முத்தையா இம்முறையும் ஆர்யாவுக்கு அதே கதைக்களத்தை தான் தேர்வு செய்துள்ளார்.


இந்த படத்தின் அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. கருப்பு வேட்டி, சட்டையில் சுவரில் வரையப்பட்ட பாட்ஷா பட ரஜினியின் ஓவியத்துக்கு முன்னால் ஆர்யா அமர்ந்திருப்பது போன்ற போஸ்டரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. தொடர்ந்து படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இப்படியான நிலையில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் வரும் ஜூன் 2 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது. 


இதற்கிடையில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மத ஒற்றுமையை வலியுறுத்தும் படமாக இது இருக்கும் என ரசிகர்கள் கணித்துள்ளனர். இதேபோல் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர்  முத்தையா, படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். 


அவர் தனது உரையின் போது, “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்னுடைய 8வது படம். பொதுவாக எனது படங்களில்  ஒவ்வொரு உறவுகளை பற்றி சொல்லியுள்ளேன். அதேபோல் தான் இப்படம் இருக்கு. அதேசமயம் நன்றியுணர்வு எவ்வளவு முக்கியமானது என்பதை காட்டியுள்ளேன். நன்றியுணர்வு இருந்தால் மனிதர்களுக்குள் எந்தவித பாகுபாடும்,வேறுபாடும் இருக்காது.  படத்தில் வர ஒவ்வொரு கேரக்டர்களும் நன்றியுணர்வுடன் இருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. 


மீண்டும் கொம்பன் படத்துக்கு பிறகு ராமநாதபுரம் களத்தை பற்றி சொல்லியுள்ளேன். படம் கோவில்பட்டியில் எடுக்கப்பட்டாலும் கதைக்களம் ராமநாதபுரம் தான்.  இப்படம் யார் மனதும் புண்படுத்தும் படி இருக்காது. வாழ்க்கையில் நான் அப்படி ஒருபோதும் செய்யமாட்டேன். எப்போதும் போல மண்மணம் மாறாமல் சொல்லியுள்ளேன். சில நல்ல விஷயங்கள் கிராமத்திலும் இருக்கிறது. குறிப்பாக உறவுகள் தொடர்பான விஷயங்களை கிராமத்து படங்கள் மூலமாக தான் சொல்ல முடிகிறது.  நகரத்து கதைகளும் பண்ண ஆசை இருக்கிறது. விரைவில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய நடிகை சித்தி இத்னானி, “எனது முதல் படமான வெந்து தணிந்தது காடு படத்திற்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அதேபோல் இந்த படத்துக்கும் கொடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.