இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் பிரபாஸ். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று வெளியான இந்த படம் இந்திய அளவில் அடைந்த பிரம்மாண்ட வெற்றியால், பிரபாஸ் புகழின் உச்சத்திற்கே சென்றார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டிலும் வசூல் சாதனையை படைத்தது. இந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த சாஹூ திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. இதையடுத்து, அடுத்த படத்தின் கதைத்தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார். இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், அவரது எந்த படமும் வெளியாகவில்லை.




இந்த நிலையில், கடந்த சில தினங்களாக நடிகர் பிரபாஸ், பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிக்கும் மிஷன் இம்பாசிபிள் திரைப்படத்தின் 7-ஆம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது பிரபாசின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மிஷன் இம்பாசிபிள் 7-ஆம் பாகத்தை இயக்கிவரும், அந்த படத்தின் இயக்குநரான கிறிஸ்டோபர் மெக்குயூரியிடம், இந்திய ரசிகர் ஒருவர் எம்.ஐ. திரைப்படத்தின் 7-ஆம் பாகத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கிறாரா? என்று ட்விட்டர் பக்கத்தில் நேற்று கேள்வி எழுப்பி இருந்தார். அவரது கேள்விக்கு பதில் அளித்துள்ள கிறிஸ்டோபர் மெக்குயூரி, நடிகர் பிரபாஸ் மிகவும் திறமை வாய்நதவர். ஆனால், நாங்கள் இருவரும் ஒருபோதும் சந்தித்ததே இல்லை என்று பதில் அளித்துள்ளார்.






இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குயூரியின் இந்த பதிலால், நடிகர் பிரபாஸ் ஹாலிவுட் படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.




ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான டாம் க்ரூஸ் தனது இளம் வயது முதல் நடித்து வரும் மிஷன் இம்பாசிபிள் திரைப்படம் உலகம் முழுவதும் மிகவும் புகழ்பெற்றது. ஆக்‌ஷன் ஸ்பை திரில்லர் ரகத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தின் 7-வது பாகம் தற்போது தயாராகி வருகிறது. ஏற்கனவே எம்.ஐ. வரிசை படங்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால், இந்த படத்தின் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படம் வரும் 2022-ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.  இந்தி நடிகர்கள் இர்பான் கான் உள்பட பலரும் ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். தற்போது நடிகர் தனுஷ் தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.