தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது, இதுவரை நான்கு சீசன்கள் வெளியாகியுள்ளன. 


பிக்பாஸ் சீசன் 5-இன் போட்டியாளர்கள் யார், யார் என்பதில் உறுதியான தகவல்கள் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இவர்கள்தான் போட்டியாளர்கள் என சமூக வலைதளத்தில் யூகித்து வருகின்றனர் ரசிகர்கள். அந்த வரிசையில், சர்வதேச திருநங்கை அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நமிதா மாரிமுத்து பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.






திருநங்கையாக தன்னை அடையாளம் கண்டுகொண்ட நமிதா, 20 வயதில் வீட்டை விட்டு வெளியேறியவர். பிறகு, சவால்களை எதிர்கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைந்துள்ளார். திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை, மிஸ் பாண்டிச்சேரி பட்டங்களை வென்ற பிறகு திருநங்கைகளுக்கான மிஸ் இந்தியா, மிஸ் இண்டர்நேஷனல் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ளார். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


பிக்பாஸ் போட்டியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பிரபல நடிகை ஷகீலாவின் மகள் மிலா பிக்பாஸில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இப்போது நமிதாவும் பங்கேற்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியை மாற்றுப் பாலின சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் பிரபலமடையச் செய்யும் முயற்சியாக படக்குழு திட்டமிட்டிருக்கலாம். 


கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படும் என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது. 


பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே வழக்கமாக சண்டையும், சர்ச்சைகளும் அதிகம் இருக்கும். அந்த வரிசையில், இப்போது வெளியாகி இருக்கும் பிக் பாஸ் ப்ரோமோவிலேயே, “வீடும் பெருசு... கலாட்டாவும் பெருசு” என கமல் தெரிவிப்பது போல ப்ரோமோவில் வசனம் வருகின்றது. அதனால், சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமிருக்காது என சொல்லாமல் சொல்லியுள்ளது பிக் பாஸ் குழு.