தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய பங்கு வகிப்பவர்களில் ஒருவர் கலை பொக்கிஷமாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவரின் உடல் மொழி, கணீர் குரல், மெய் சிலிர்க்க வைக்கும் நடிப்பு இவை அனைத்தும் அவரின் மறைவிற்கு பிறகும் நம்மை விட்டு நீங்காத நினைவுகள். இது அவரின் தனித்துவத்திற்கு கிடைத்த அங்கீகாரம். 


 


39 ஆண்டுகள் நிறைவு :


 


1983ம் ஆண்டு கே. சங்கர் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் அவரது மகன் பிரபு நடிப்பில் வெளியான திரைப்படம் "மிருதங்க சக்கரவர்த்தி". மேலும் இப்படத்தில் கே. ஆர். விஜயா, எம்.என். நம்பியார், சுலோச்சனா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி இன்றோடு 39 ஆண்டுகளை நிறைவு செய்தாலும் இன்றும் நடிப்பால் நம்மை கட்டிப்போட்டவர் நடிகர் திலகம். 


 



 


என்ன ஒரு தொழில் பக்தி:


 


இப்படத்தில் சிவாஜி கணேசன் ஒரு மிருதங்க வித்வானாக நடித்திருப்பார். அவரின் நடிப்பு தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜ மிருதங்க சக்கரவர்த்தியாக இருந்த உமையாள்புரம் சிவராம கிருஷ்ணன் அவர்களிடம் இருந்து அங்கு அசைவுகள், கை விரல் அசைவுகள், முக பாவனைகள் என அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து உள்வாங்கி கொண்டு கலையை கற்றுக்கொள்ள செய்தாராம் சிவாஜி கணேசன். இப்படத்தில் ஒரு நிஜமான மிருந்தங்க கலைஞனாகவே காட்சியளிப்பார். படத்தின் படப்பிடிப்பு முடியும் வரையில் மிருதங்க வித்வான் சிவராம கிருஷ்ணன் அவர்களையும் கூடவே வைத்துள்ளார். அப்போது தான் ஏதாவது தவறு செய்தால் திருத்திக்கொள்ள எதுவாக இருக்கும் என்ற நோக்கத்தில் அதை செய்துள்ளார். அப்படி பட்ட தொழில் பக்தி, நேர்த்திக் கொண்ட ஒரு கலைஞர் நடிகர் திலகம். அவரின் நடிப்பை பார்த்த கர்நாடகாவின் மிகவும் பிரபலமான செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், சிவாஜி கணேசனின் நடிப்பை பார்த்து  புகழ்ந்துள்ளார். உண்மையான மிருதங்க கலைஞர்கள் கூட உங்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியது மிக மிக சிறப்பு. 


 






 


 


நடிப்பு கடல் சிவாஜி:


 


கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்கும் போது நடிகர் திலகம் வாயில் இருந்து ரத்தம் வழிந்த போதும் விடாமல் வசித்து கொண்டே இருப்பார். இந்த காட்சி பார்வையாளர்களை வியக்க செய்தது. அது நடிப்பு தான் என்று தெரிந்தாலும் அவர்களால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இயலாமல் போனது என்பது தான் உண்மை. 


இந்த ஈடு இணையில்லா நடிகரின் பெருமை தமிழ் சினமா உள்ள வரை நிலைத்து இருக்கும். தமிழ் சினிமா வரலாற்றில் அழியாத பொக்கிஷம் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.