வந்தோரை வாழ வைக்கும் சென்னை நகரத்தை படத்தின் டைட்டிலாக வைத்து ஒரு சூப்பர் ஹிட் காமெடி கலந்த காதல் கதை தான் 2013ம் ஆண்டு வெளியான "வணக்கம் சென்னை" திரைப்படம். இப்படம் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்தார் கிருத்திகா உதயநிதி. உதயநிதி தயாரிப்பில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.





மோதல் - காதல் - காமெடி:


தேனி மாவட்டத்தை சேர்ந்த நாயகன் வேலை தேடியும், தென்னிந்தியக் கலாசாரத்தை புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு லண்டனில் இருந்த வந்த நாயகியும் சென்னையில் சந்திக்கிறார்கள். இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறுகிறது. இதற்கு இடையில் சந்தானம் காமெடி புகுந்து விளையாடுகிறது. படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை சந்தானம் காமெடியில் சிக்ஸர் சிக்ஸராக அடித்து தள்ளி ரசிகர்களை பிளாட் ஆக்கிவிடுவார். 

 

மிர்ச்சி சிவாவையும், ப்ரியா ஆனந்த் இருவரையும் ஒரே ஃப்ளாட்டில் ஏமாற்றி தங்கவைக்கும் போலி ஹவுஸ் ஓனராக சந்தானம் நடித்திருந்தார். ஏற்கனவே லண்டனில் நிச்சயிக்கப்பட்ட பெண் பிரியா ஆனந்த் காதல் கை கூடியதா இல்லையா என்ற கதைக்களத்தை காமெடி கலந்த ஒரு நகைச்சுவை பேக்கேஜாக வழங்கி இருந்தனர். அஜய்யாக மிர்ச்சி சிவாவும், அஞ்சலியாக பிரியா ஆனந்த்தும் நடித்திருந்தனர். மிர்ச்சி சிவாவின் வழக்கமான காமெடியுடன் சந்தானம் இணைந்ததால் படம் வேற லெவலில் ஹிட்டானது.    

 

 



அமர்க்களமாக அமைந்த அனிருத் இசை:

அனிருத் இசை என்றாலே இளைஞர்கள் மத்தியில் மாஸான வரவேற்பு இருக்கும். அந்த வகையில் வணக்கம் சென்னை படத்தில் இடம்பெற்ற ஓ பெண்ணே பெண்ணே, ஒசக்கா சேத்த ஒசக்கா, ஐலேசா ஐலே ஐலேசா, சென்னை சிட்டி கேங்ஸ்டர், எங்கடி பொறந்த, காற்றில் ஏதோ புதுவாசம் என வெவ்வேறு ரகத்தில் இருந்து அனைத்து பாடல்களும் சக்கை போடு போட்ட சூப்பர் ஹிட் பாடல்கள். அதுவே படத்தின் வெற்றிக்கு மிக பெரிய பிளஸ்சாக அமைந்தது. இன்று வரை அவை பிளே லிஸ்டில் இடம்பெற்றுள்ள எவர்கிரீன் பாடல்கள்.

மிர்ச்சி சிவா - சந்தானம் காமெடி ட்ராக், அனிருத் இசை என இரண்டு பலமான பிடிப்பை நம்பியே வெளியான 'வணக்கம் சென்னை' திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.