ராபர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மின்னும் ஓர் இரவு’. இனிகோ பிரபாகர் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், மணிகண்டன் ஆகியோர் இணைந்து படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர். வரும் நவம்பர் 27ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Continues below advertisement

இப்படத்தில் அஞ்சு கிருஷ்ணா அசோக், பிக் பாஸ் சத்யா, சுப்பிரமணிய சிவா, சரவண சக்தி, ராஜன், உதயராஜ், அருவி பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுரேஷ் குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரணவ் சூரஜ் இசையமைத்துள்ளார். எஸ்.என். ஃபாசில் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

ஒரு கிராமத்தில் ஐந்து நண்பர்களுக்கு ஓர் இரவில் புதையல் கிடைக்கிறது. அந்தப் புதையல் அவர்களுக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் இப்படத்தின் கதைக்களம். 24 மணி நேரத்தில் நடைபெறும் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் இரவு நேரத்திலேயே நடைபெற்றுள்ளது.

Continues below advertisement

விழாவில் பேசிய தயாரிப்பாளர் ராபர்ட் ராஜ், கதையின் சுவாரசியம் காரணமாக இப்படத்தைத் தயாரிக்க முன்வந்ததாகவும், படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இயக்குநர் மணிகண்டன் பேசுகையில், சிவபிரபு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கதையைத் தன்னிடம் கூறியதாகவும், பின்னர் குறும்படமாக உருவாக்கிக் காட்டியதாகவும் தெரிவித்தார்.

நடிகர் இனிகோ பிரபாகரைப் பாராட்டிப் பேசிய இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன், 'சுந்தரபாண்டியன்' படத்தில் அவருடன் பணியாற்றிய அனுபவத்தை நினைவுகூர்ந்தார். கடந்த 15 ஆண்டுகளாகப் பல சவால்களைச் சந்தித்தும், பொருத்தமான கதைக்காகக் காத்திருந்த இனிகோவுக்கு இப்படம் வெற்றியைத் தேடித்தரும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்தக் கதைக்காக இனிகோ ஐந்து கதைகளை நிராகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நடிகர் இனிகோ பேசுகையில், கதையைப் படித்தவுடன் நடிக்க வேண்டும் என முடிவு செய்ததாகவும், படக்குழுவினரின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்.

நவம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படம் இனிகோ பிரபாகருக்கு முக்கியமான திருப்புமுனையாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.