தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் நேர்காணல் ஒன்றில், நடிகர் அஜித்தை யார்? என கேட்ட கேள்விக்கு, அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். 


உலக சுற்றுலாவில் அஜித் 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள அஜித், கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் அன்று வெளியானது. வசூலில் நல்ல சாதனைப் படைத்த நிலையில், அஜித் அடுத்ததாக இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மிக நீண்ட இழுபறிக்குப் பின் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. அதேசமயம் அஜித்தோ பைக்கில் உலக நாடுகளுக்கு தொடர்ந்து பயணம் செய்து வருகிறார். 


இப்படியான நிலையில் அஜித்துக்கு போட்டியாக கருதப்படும் விஜய்க்கு அடுத்ததாக லியோ படம் வெளியாகவுள்ளது. தொடர்ந்து 68வது படத்திற்கான அறிவிப்பும் வெளியாகி விட்டது. ரஜினியும் ஜெயிலர் படம் ரிலீசான நிலையில் அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட்டு விட்டார். ஆனால் அஜித்தோ படம் நடிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம் செய்கிறார் என அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். அடுத்த வாரம் மகிழ் திருமேனி படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 


துரைமுருகன் பதில் 


இதனிடையே தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அவரிடம் தொகுப்பாளர், ‘விஜய், அஜித் படங்களெல்லாம் பார்ப்பதுண்டா?’ என்ற கேள்வியை கேட்கிறார். அதற்கு துரைமுருகனோ, ’அஜித்துன்னா யாரு?’ என்ற கேள்வியை எழுப்பியது போன்று ப்ரோமோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. இதனைப் பார்த்த அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அமைச்சர் துரைமுருகனை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். 


என்ன பழசெல்லாம் மறந்து போச்சா? 


விமர்சனம் முன்வைக்கும் அஜித் ரசிகர்கள் எல்லோரும் ஒரு சம்பவத்தை மட்டுமே குறிப்பிட்டு கருத்து தெரிவிக்கின்றனர். அதாவது கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சி இருந்தது. அப்போது முதலமைச்சராக கருணாநிதி இருந்தார். அந்த சமயம் தமிழ் திரையுலகம் சார்பில் அவருக்கு, ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் பேசிய அஜித், ‘ இதுபோன்ற விழாவுக்கு வற்புறுத்தி அழைக்கப்படுவதாகவும், இதனை சரிசெய்ய வேண்டும்’ எனவும் அனைவரது முன்னிலையிலும் பேசியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அஜித்தின் இந்த பேச்சுக்கு அப்போது அரங்கில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார். இதையெல்லாம் குறிப்பிட்டு, ‘என்ன பழசெல்லாம் மறந்து போச்சா?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.