மைக்கேல் படத்திலிருந்து தனது காட்சிகளை நீக்கி விட்டதாக நடிகை தீப்ஷிகா வருத்தம் தெரிவித்துள்ளார்.
கேங்ஸ்டர் படம்
‘புரியாத புதிர்’ ‘ இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களை இயக்கிய இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் மூன்றாவது படமாக ’மைக்கேல்’ பிப்.04ஆம் தேதி வெளியானது.
தெலுங்கு, தமிழ் என பான் இந்தியா படமாக வெளியான மைக்கேல் ஸ்டைலிஷ் கேங்ஸ்டர் படமாக அமைந்தபோதும் சுவாரஸ்யமற்ற ஏற்கெனவே பார்த்துப் பழகிய கேஜிஎஃப் பாணி படமாக அமைந்த நிலையில் ரசிகர்களின் கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
நடிகர் சந்தீப் கிஷண், கௌதம் மேனன், விஜய் சேதுபதி, வரலட்சுமி, திவ்யான்ஷா, தீப்ஷிகா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
காட்சிகள் கட்... வருத்தப்பட்ட நாயகி!
இந்நிலையில் இப்படத்தின் கௌதம் மேனனின் இரண்டாவது மனைவியாகவும் படம் நகர்வதற்கான மையக் கதாபாத்திரமாகவும் நடித்திருந்த நாயகி தீப்ஷிகா தன் காட்சிகள் பல நீக்கப்பட்டுவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
வேறு ஒரு பிரபல நடிகை நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் இறுதி நேரத்தில் தான் ஒப்பந்தமானதாகவும், படத்தின் நீளம் கருதி தன் காட்சிகள் கட் செய்யப்பட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதியுடன் தனக்கு நிறைய காட்சிகள் இருந்ததாகவும், அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் தீப்ஷிகா வருத்தம் தெரிவித்துள்ளார்.
தற்போது தீப்ஷிகா நடித்துள்ள ராவண கல்யாணம் படம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மைக்கேல் படத்தை நெட்டிசன்கள் காட்டமாக விமர்சித்த நிலையில், இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இயக்குநர் விளக்கம்
அதில், “எனது எல்லா படைப்புகளையும் போலவே மைக்கேல் திரைப்படமும் என் இதயத்துக்கு நெருக்கமான ஒன்று தான். அதற்கும் என் 100% உழைப்பையே கொடுத்திருக்கிறேன்.
அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை. அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய விருப்பத் தேர்வும் மாறுபடவே செய்யும்.
மைக்கேலை ரசித்தவர்களுக்கு நன்றி. மாறுபட்ட கருத்து கொண்ட ரசிகர்களுக்கு அடுத்த முறை உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைத்து கருத்துகளையும் மதிக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
சாம் சி.எஸ்ஸின் இசையும், விஜய் சேதுபதியின் கௌரவ கதாபாத்திரமும் இந்தப் படத்தில் பேசப்பட்ட நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது.