இயக்குனர் பாலுமகேந்திராவின் கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி 80-களில் தமிழ் திரை உலகில் நட்சத்திர நாயகராக வலம் வந்தவர் நடிகர் மோகன்.
மூடுபனி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை,விதி, நூறாவது நாள், கோபுரங்கள் சாய்வதில்லை, மெல்ல திறந்தது கதவு, உதயகீதம், இதயக்கோவில், மௌன ராகம், ரெட்டைவால் குருவி உள்ளிட்ட பல மெகா ஹிட் திரைப்படங்களில் மோகன் நடித்துள்ளார்.
குறிப்பாக நடிகர் மோகன் நடித்த திரைப்படங்களின் பாடல்களும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றதோடு இன்று வரை மோகன் ஹிட்ஸ் என அனைவரது ஃபேவரட் லிஸ்டில் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக நடிப்பிற்கு தற்காலிக ஓய்வு கொடுத்த மோகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக மோகன் நடித்துள்ள திரைப்படம் ஹரா.
நடிகர் சாருஹாசன் கதாநாயகனாக நடித்து கடந்த 2019-ஆம் ஆண்டு வெளிவந்த தாதா87 திரைப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ.G எழுதி இயக்கும் ஹரா திரைப்படத்தில் மோகன் உடன் இணைந்து நடிகை குஷ்பூ கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ஜெய்குமார், மைம் கோபி, ஆதவன், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கும் ஹரா படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். இந்நிலையில் ஹரா திரைப்படத்திலிருந்து முதல் பாடலாக கயா முயா பாடல் வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மைக் மோகன் , செய்தியாளர்களில் ஒருவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஏற்கனவே பாண்டியன் சோழர்கள் என பல பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கிறது இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு ஹரா என்ற பெயர் வைத்துள்ளீர்கள் இதனால் ஏதும் பிரச்சனை ஏற்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு,
‛‛இது ஹரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா; இதில் இந்த திரைப்படத்தை பற்றி மட்டும் கேள்வி கேளுங்கள்,’’ என்று சற்று கடுப்பாக பதில் அளித்தார் மைக் மோகன்.