பல்வேறு பிரபலங்களும் தாங்கள் இறந்துவிட்டதாக புரளிகள் கிளம்பிய பிறகு, மறுப்போடு வந்த கதைகள் ஏராளமாக இருக்கின்றன. ஹாலிவுட் நடிகர்கள் மார்கன் ஃப்ரீமேன், பிராட் பிட், சில்வெஸ்டர் ஸ்டாலோன், பியான்ஸ், டாம் க்ரூஸ் முதலான பலரின் `இறப்பு செய்திகள்’ போலியானவை என நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தற்போது இடம்பெற்று, ரசிகர்களின் அன்பைப் பெருவாரியாகப் பெற்றிருக்கிறார் முன்னாள் அடல்ட் திரைப்பட நடிகை மியா கலீஃபா. 


மியா கலீஃபாவின் ரசிகர்களைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தப் புரளியைத் துவக்கி வைத்தது ஃபேஸ்புக் தளம். தான் உயிரோடு இருப்பதாக, இதனையொட்டி எழுந்த சர்ச்சைகளுக்கு மீம் பதிவிட்டு பதிலளித்துள்ளார் மியா கலீஃபா. 


மியா கலீஃபாவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தற்போது அவரது பெயருக்கும் மேல் `Remembering' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த வார்த்தை அவரது ப்ரொஃபைலின் பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளதோடு, அதனோடு, `மியா கலீஃபாவை விரும்பும் மக்கள் அனைவருக்கும் அவரது ப்ரொஃபைலைப் பார்வையிடும் போது, அவரை நினைவுகூர்ந்து வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும் என விரும்புகிறோம்’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.



இந்த `Remembering' டேப்பிற்குக் கீழ், `tributes' என்ற டேப் சேர்க்கப்பட்டுள்ளது. அதில், `இந்த இடத்தை மியா கலீஃபாவின் நண்பர்களும், குடும்பத்தினரும் அவரை நினைவுகூர்ந்து, பெருமைப்படுத்த பயன்படுத்தலாம் என விரும்புகிறோம்’ என்ற வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது. 


மேலும், மியா கலீஃபாவின் ஃபேஸ்புக் ப்ரொஃபைலில் அவரது முந்தைய பதிவுகள் அனைத்தும் மாயமாக மறைந்துள்ளன. ஒரே ஒரு பதிவு மட்டுமே அவரது ப்ரொஃபைலில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 23 அன்று, படப்பிடிப்பு ஒன்றின் போது தண்ணீரில் மூன்று முறை மூழ்கியதாகவும், அது படப்பிடிப்பிற்குப் பயனுள்ளதாக இருந்ததாகவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவும், Tributes பக்கமும் மட்டுமே இடம்பெற்றுள்ளன. 


இறந்தவர்களின் ஃபேஸ்புக் பக்கங்களுக்கு நினைவுகூர்தலுக்காக மாற்றங்களை ஏற்படுத்துவது போல, மியா கலீஃபாவின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு இப்படியான மாற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணம் குறித்து யாருக்கும் தகவல் கிடைக்கவில்லை. மேலும், சிலர் மியா கலீஃபா மரணமடையவில்லை எனப் பதிவிட்டுள்ளனர்; சிலர் மியா கலீஃபாவுக்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்; வேறு சிலரோ தங்கள் அனுதாபங்களையும் பதிவிட்டுள்ளனர். 



கடந்த ஜனவரி 20 அன்று, ஃபேஸ்புக் தளத்தில் தன்னைப் பற்றி நிகழ்ந்து வரும் சர்ச்சைகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் 1975ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் காமெடி திரைப்படமான Monty Python and the Holy Grailலில் வரும் காட்சி ஒன்றை மீமாகப் பதிவிட்டு, `நான் இன்னும் இறக்கவில்லை; நான் நலமுடன் இருக்கிறேன்’ எனப் பொருள் வருமாறு தெரிவித்துள்ளார். 






மியா கலீஃபா ஃபேஸ்புக் தளத்தில் ஆக்டிவாக இல்லாததால் அவரது ஃபேஸ்புக் ப்ரொஃபைல் இவ்வாறு மாற்றப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும், அவர் இன்ஸ்டாகிராம் தளத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இயங்கி வருகிறார். 


கடந்த 2020ஆம் ஆண்டு, இதே போல ட்விட்டர் பயனாளர் ஒருவர் மியா கலீஃபா மறைந்ததாக புரளியைக் கிளப்பிய போதும், மியா கலீஃபா மீம் பதிவிட்டு பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.