சினிமா மூலம் பலதரப்பட்ட கலைகள், பலரின் வாழ்க்கை முறைகள், விஞ்ஞானம் என மக்களுக்கு பரிச்சயம் இல்லாத பல விஷயங்களையும் கொண்டு சேர்க்க முடிகிறது. அப்படி ஒன்று தான் மக்களின் கவனத்தை ஈர்க்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படங்கள். ஹாலிவுட் லெவெலுக்கு அதை பிரமாண்டமாக கொடுக்க முடியாது என்றாலும் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் தொழிநுட்பத்தை பயன்படுத்தி அதற்கு நிகரான ஒரு அனுபவத்தை இந்திய ரசிகர்களுக்கு கொடுக்க முடியும் என்பதை ஒரு சில சயின்ஸ் பிக்சன் திரைப்படங்கள் மூலம் நிரூபித்துள்ளனர் இந்திய திரையுலகத்தினர்.
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷல் ரிலீஸாக இன்று வெளியான 'அயலான்' திரைப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது. வேற்றுகிரகவாசிகளின் படங்கள் பார்வையாளர்களை எளிதில் கவரும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் பொருத்தமான ஒரு ஜானராக ஏலியன் படங்கள் நிச்சயம் இருக்கும். அந்த வகையில் இந்திய சினிமாவில் ஏற்கெனவே வெளியாகியுள்ள ஏலியன் ஜானர் படங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க...
கலை அரசி:
தமிழ் சினிமாவின் அடையாள சிங்கம் எம்.ஜி.ஆர் முதல்முறையாக தனது வழக்கமான ஸ்டைலில் இருந்து சற்று வேறுபட்டு சயின்ஸ் பிக்சன் படம் ஒன்றில் நடிக்கும் புது முயற்சியை எடுத்தார். அது தான் 1963ம் ஆண்டு வெளியான 'கலை அரசி' திரைப்படம். இந்திய திரைப்படங்களின் வரிசையில் உருவான முதல் விண்வெளி திரைப்படம் இதுவாகும். ஏ.காசிலிங்கம் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் வேற்று கிரகத்தில் கலையை வளர்க்க வேண்டும் என்பதற்காக ஹீரோயின் பானுமதியை பறக்கும் தட்டில் வந்து வேறு ஒரு கிரகத்திற்கு கடத்தி செல்வார்கள். இப்படி ஒரு கதைக்களத்தை வைத்து உருவான கலை அரசி திரைப்படம் அந்த காலகட்டத்திலேயே ஒரு வித்தியாசமான முயற்சி.
கேப்டன் :
இயக்குநர் சக்தி சௌந்தரரராஜன் இயக்கத்தில், நடிகர் ஆர்யா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சிம்ரன், ஹரீஷ் உத்தமன் நடிப்பில் 2022ம் ஆண்டு வெளியான இப்படத்தில் இந்திய ராணுவ அதிகாரியான ஆர்யா ஏலியனிடமிருந்து மக்களை காப்பாற்றுவதை கதைக்களமாக கொண்டு அமைந்து இருந்தது.
கோய் மில் கயா :
ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் 2003ம் ஆண்டு இந்தியில் வெளியான திரைப்படம் 'கோய் மில் கயா'. ஹிருத்திக் ரோஷன் , ப்ரீத்தி ஜிந்தா, ரேகா உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் மூளை வளர்ச்சி குன்றிய ஒருவரின் ஆழமான உணர்ச்சியை பிரதிபலிக்கும் விதமாக வேற்றுகிரகவாசியை தொடர்பு கொள்ளும் கதையை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்தியிருந்தது.
பிகே :
2014ம் ஆண்டு ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான், அனுஷ்கா சர்மா, ஹர்பஜன் சிங் ராஜ்புத், போமன் இரானி, சஞ்சய் தத் பலர் நடித்திருந்த இப்படத்தில் வேற்றுகிரகத்தில் இருந்து பூமிக்கு வந்து நமது மதம், கலாச்சாரம், மரபு மற்றும் வாழ்க்கை முறையை கொஞ்சம் வித்தியாசமாக கடைபிடிக்கும் ஒரு மனிதனின் கதை. பிகே கதாபாத்திரத்தில் நடிகர் அமீர்கான் அப்பாவித்தனமான நடிப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.