ஆனந்தா பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வி. லட்சுமணன் தயாரிப்பில் 1974ம் ஆண்டு எஸ்.எஸ். பாலன் இயக்கத்தில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சிரித்து வாழ வேண்டும்'. இப்படம்  டிஜிட்டலில் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சரத்குமார், நடிகை லதா, மயில்சாமி, ஆர்.கே. செல்வமணி, பிரமிட் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு 'சிரித்து வாழ வேண்டும்' படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர். இப்படம் டிஜிட்டலில் ஹெச்டி பிரிண்டில் விரைவில் வெளியாகவுள்ளது. இது எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையவுள்ளது. 


 



 


அடுத்தடுத்து எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு திரை விருந்து :



சமீபகாலமாக எம்ஜிஆரின் பல படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றம் செய்யப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்த டிஜிட்டல் மயமான உலகில் கருத்துள்ள பல பழைய படங்கள் புதிய பொலிவுடன் மீண்டும் வெளியாவது சினிமா ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. நான் ஏன் பிறந்தேன், ஆயிரத்தில் ஒருவன், ரிக்ஷாகாரன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து நவம்பர் 30, 1974ம் ஆண்டு எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்த 'சிரித்து வாழ வேண்டும்' திரைப்படம் விரைவில்- டிஜிட்டலில் வெளியாக உள்ளது. 


 






 


இரட்டை கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் :


பாலிவுட்டில்  'சஞ்சீர்' எனும் பெயரில் வெளியான படத்தை தழுவி தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படம் 'சிரித்து வாழ வேண்டும்'. இந்த படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் போலீஸ் கதாபாத்திரத்திலும், நடிகர் பிரான் இஸ்லாமியராகவும் நடித்திருந்தனர். ஆனால் தமிழில் வெளியான சிரித்து வாழ வேண்டும் படத்தில் போலீஸ் அதிகாரி மற்றும் இஸ்லாமியர் என இரண்டு கதாபாத்திரத்தையும் நடிகர் எம்.ஜி.ஆரே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






இப்படத்தில் இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் பாடும் ' ஒன்றே சொல்வான், நன்றே செய்வான்...' எனும் அந்த பாடல் மிகவும் பிரபலமான பாடல். படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்களும் மிகவும் சிறப்பாக அமைந்து இருந்தன. அந்த காலத்தில் சூப்பர் ஹிட்டான இந்த படத்தை மீண்டும் 48 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்  டிஜிட்டலில் மெருகேற்றியுள்ளனர். 


'சிரித்து வாழ வேண்டும்' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. அவருடைய பல படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட வேண்டும். அவரின் ஒழுக்கம், பழக்கவழக்கங்கள், கருத்துக்கள், சிந்தனைகளை பற்றி இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என எம்ஜிஆரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.