எம்.ஜி.ஆர் பிறந்தநாளான இன்று எம்.ஜி.ஆர் புகைப்படம் இல்லாமல் எம்.ஜி.ஆர் வேடமேற்று நடித்த அரவிந்த் சாமி புகைப்படத்தைக் கொண்டு அதிமுகவினர் பேனர் வைத்துள்ளது விமர்சனங்களைப் பெற்று வருகிறது.


எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த்சாமி:


ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரனாவத் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரமேற்று நடித்த திரைப்படம் ‘தலைவி’. ஜெயலலிதாவின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில், நடிகர் அரவிந்த் சாமி தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


2021ஆம் ஆண்டு வெளியான தலைவி திரைப்படம் எதிர்பார்த்த வணிக வெற்றியைப் பெறாவிட்டாலும் நடிகர், நடிகையரின் நடிப்பு, குறிப்பாக எம்.ஜி.ஆர் மேனரிசத்தை அப்படியே திரையில் கொண்டு வந்திருந்த நடிகர் அரவிந்தசாமியின் நடிப்பு பெரும் பாராட்டுகளைக் குவித்தது.


107வது பிறந்தநாள்:


இந்நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்தநாளான இன்று, எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் சாமி புகைப்படத்தைக் கொண்டு அதிமுகவினர் பேனர் வைத்துள்ளது விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இன்று எம்.ஜி.ஆரின் 107ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும், அதிமுக தலைமையினரும் கட்சித் தொண்டர்களும் அவரை நினைவுகூர்ந்து கொண்டாடி வருகின்றனர்.


அ.தி.மு.க. பேனரால் பரபரப்பு:


அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுகவினர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து  வைத்துள்ள பேனரில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் கட்சியினரின் படங்கள் இடம்பெற்றிருக்க, எம்.ஜி.ஆர் புகைப்படம் மட்டும் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக எம்.ஜி.ஆர் போல் நடித்த தலைவி பட அரவிந்த் சாமியின் புகைப்படம் இந்த பேனரில் இடம்பெற்றுள்ளது.


மேலும், “சத்துணவு கண்ட சரித்திர நாயகன், பாரத ரத்னா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 107ஆவது பிறந்தநாள் விழா” என்றும் எழுதப்பட்டு, ஒரு ஓரத்தில் அண்ணாவுடன் எம்.ஜி.ஆர் புகைப்படம் மிக சிறிதாக இடம்பெற்றிருக்க, அரவிந்த் சாமியின் புகைப்படம் பெரிய அளவில் வைக்கப்பட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






இந்த சம்பவம் தற்போது நெட்டிசன்களின் விமர்சனங்களையும் அதிமுகவினரின் அதிருப்தியையும் சம்பாதித்து இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. “அரசியல், சினிமா, நிஜ வாழ்வு என அனைத்திலும் ஹீரோவாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆரை இப்படி அவமானப்படுத்துவதா/” என இணையவாசிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.


மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!


Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!