இசையமைப்பாளர் பிரவீன் குமார்


2021-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. இப்படத்திற்கு இசையமைத்து கவனமீர்த்தவர் பிரவீன் குமார். மேதகு படம் தவிர்த்து இரக்கதன் என்கிற படத்திற்கும் இசையமைத்துள்ளார். பிரவீன் குமாரின் இசையில் ஒரு தனித்துவம் இருப்பதாகவும் தமிழ் சினிமாவில் அவர் பெரிய இடத்திற்கு செல்வார் என்று அவரை பாராட்டியுள்ளார்கள். தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களுக்கு இசையமைத்து அவர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறுவான் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் அவரது மரணம் குறித்த அதிர்ச்சி தகவல் வந்து சேர்ந்துள்ளது.


கடந்த சில மாதங்களாக  பிரவீன் குமாரின் உடல் நலம்  மோசமடைந்திருந்ததாகவும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் பிரவீன் குமார். இதனை தொடர்ந்து நேற்று மே 1 ஆம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மே 2-ஆம் தேதி அதிகாலை 6 மணியளவில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரவீன் குமாரின் உடல் நிலை குறித்த பிற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று பல கனவுகளை சுமந்திருந்த அந்த பிரவீன் குமாரின் வயது வெறும் 28.  அவரது திடீர் மரணம் தமிழ் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரவீன் குமாருக்கு தமிழ் திரைத்துறையினர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். 




ஒரே நாளில் இரண்டு இசைக் கலைஞர்களின் மரணத் தகவல் தமிழ் இசைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூத்த பின்னணி பாடகி உமா ரமணன் மே 1 ஆம் தேதி இரவு உடல் நலக் குறைவால் மரணமடைந்த தகவல் முதல் அனைவரையும் உலுக்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது ஒரு இளம் இசையமைப்பாளரின் மரணம் அடுத்தடுத்த அதிச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.  பிரவீன் குமாரின் இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான தஞ்சாவூரில் வடக்குவாசலில் அவரது இல்லத்தில் இருந்து இன்று மே 2 ஆம் தேதி மாலை 6 மணியளவில் புறப்பட இருக்கிறது. இசையமைப்பாளர் பிரவீன் குமார் மேதகு படத்தில் தனது இசைக்காக என்று மக்களால் நினைவுகூறப்படுவார்.