90’ஸ் கிட்ஸை அலரவைத்த சந்திரமுகி: 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், 2005 ஆம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. ஜோதிகா, பிரபு, நாசர், வடிவேலு, மாளவிகா, கே ஆர் விஜயா, நயன்தாரா என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம் தான் இது. மலையாளத்தில் மணிச்சித்ரதாழு என எடுக்கப்பட்ட படத்தின் தமிழ் தழுவலாக அமைந்தது சந்திரமுகி திரைப்படம். திரையரங்குகளில் 800 நாட்களையும் ஓடி வசூல் சாதனை செய்த இப்படத்தை இன்றளவும் பேய் படம் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உண்மையில் சந்திரமுகி ஒன்றும் பேய்க் கதையல்ல. அப்படத்தில், மனோதத்துவ மருத்துவராக வரும் சூப்பர் ஸ்டாரும் கங்காவிற்கு இருப்பது ஸ்பிலிட் பெர்ஸனாலிட்டி டிஸார்டர் என்பதை நன்கு விளக்கியிருப்பார். “கங்கா தன்னை சந்திரமுகியா நினைச்சிக்கிட்டா..கங்கா சந்திரமுகியா மாறிட்டா..” என நடிகர் ரஜினிகாந்த் டைலாக் போது கூஸ் பம்ப்ஸ் மொமன்ட்டை உணர்ந்த மக்கள், கங்காவிற்கு உண்மையில் பிரச்சனைதான் என்ன? என்பதை தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டனர். 




ஸ்பிலிட் பெர்ஸனாலிட்டி டிஸார்டர்:


ஒருவர் இன்னொருவராக மாறும் மனரீதியான நோயிற்கு பெயர்தான் ஸ்பிலிட் பெர்ஸனாலிட்டி டிஸார்டர். இவ்வகையான மனநாேய் இருப்பவர்களுக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெர்ஸனாலிட்டீஸ் ஒளிந்திருக்கும். இப்படி இருக்கும் பெர்ஸனாலிட்டிகளுக்கு வெவ்வேறு பெயர்களும், குணாதிசியங்களும் இருக்கும். உதாரணத்திற்கு, கங்கா சந்திரமுகியாக மாறும் தருணங்களில் அவருக்கு சம்பந்தமேயில்லாத தெலுங்கு மொழியை பேசுவார். அதுமட்டுமன்றி, இயல்பாக கோபப்படாத குணமுடைய கங்கா, சந்திரமுகியாக மாறுகையில் ஒருவரை கொல்லும் அளவிற்கு ஆக்ரோஷமடைவார். இதை வைத்துத்தான் கங்காவிற்கு இப்படியொரு பிரச்சனை இருக்கிறது என்பதையே ரஜினி அறிந்துகொள்வார். 


இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிறு வயதில் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ பாதிக்கப்பட்டிருப்பர். சந்திரமுகி படத்திலும், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ஜோதிகா, தனது பாட்டியின் இழப்பினாலும் மிகுந்த மனமுடைந்து போவார். தனிமையைப் போக்கிக் கொள்வதற்காக அவர் படிக்கும் புத்தகங்களின் கதாப்பாத்திரமாகவே மாறிவிடுவார். இந்நோய் உள்ள பலருக்கும் இது போன்ற ஏதாவதொரு குணாதிசயம் இருக்கும் என சொல்லப்பட்டிருக்கும். இது மட்டுமன்றி, மன அழுத்தம், பதற்றம், எது நிஜம் என்று தெரியாத அளவிற்கு பிரமை என பல வகையினால் அவர்கள் பாதிக்கப்படுவர் எனவும் சொல்லப்பட்டிருக்கும். இந்நோயினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் தனக்கோ தன்னை சுற்றியுள்ளவர்களுக்கோ, தீங்கு விளைவிக்கவும் முயற்சி செய்வார்கள் எனவும் சொல்லப்பட்டிருக்கும்.




தீர்வு என்ன?


உலகளவில் ஸ்பிலிட் பெர்ஸனாலிட்டி டிஸார்டர் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 1.5 சதவிகிதம் மட்டுமே உள்ளதாக சில தரவுகள் தெரிவிக்கின்றன.  இந்நோயினை குணப்படுத்த மருந்துகள் இருப்பினும், சைக்கோத்தெரப்பி எனப்படும் கவுன்ஸ்லிங் முறையே சிறந்ததாகும். மேற்கூறியது போல, இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிவயதில் நடந்த ஏதேனும் ஒரு விஷயத்தால்தான் வேறொரு பர்ஸநாலிட்டியை உருவாக்கியிருப்பர். ஆதலால், ஹிப்னோ தெரெப்பி முறையின் மூலம், அவர்களது கடந்தகால வாழ்வில் நடந்த நிகழ்வுகளை தெரிந்து கொண்டு அவர்களின் தற்போதைய நிலையை குணப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் நிறையவே உண்டு எனவும் கருதப்படுகிறது.


அநியாயத்தை பொறுக்காத அந்நியன்!


பிரம்மாண்ட இயக்குனர் எனக்கூறப்படும் சங்கர் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் அந்நியன். விக்ரம் ஹீரோவாக நடிக்க, சதா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். சமூக பிரச்சனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத ஒருவன், இதனால் அவனுக்கு எழுந்த மனரீதியான மாற்றம், அதையடுத்து நடைபெறும் சம்பவங்கள் என இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பெற்றிருக்கும். சந்திரமுகியில் சொன்னது போன்று, இப்படத்திலும் ஹீரோவிற்கு ஸ்பிலிட் பெர்ஸனாலிட்டி டிஸார்டர்தான். ஆனால், இவருக்குள் அம்பி, ரெமோ, அந்நியன் என மூன்று பர்ஸனாலிட்டிகள் இருந்தன. 




சிறு வயதிலிருந்தே நந்தினியை காதலித்த அம்பிக்கு அவளை கரெக்ட் பன்ன வழி தெரியாமல் பிறந்த கதாப்பாத்திரம் ரெமோ. அதே போல, அநியாயங்களை தட்டிக் கேட்டும் யாரையும் திருத்த முடியவில்லையே என்ற ஆத்திரத்தில் பிறந்த பர்ஸனாலிட்டிதான் அந்நியன். சந்திரமுகியை போல, இங்கேயும் அதே ஸ்பிலிட் பர்ஸனாலிட்டி டிஸார்டர்தான். ஆனாலும், இப்படத்தில் ஹீரோவிற்கு இந்த நோய் கையை மீறி போய் விடும். இதனால், க்ளைமேக்ஸ் வரை அம்பியின் நோய் குணமாகமையே இருப்பது போன்றும், அவன் முழுதாக அந்நியனாக மாறியது போன்றும் கதை அமைக்கப்பட்டிருக்கும். உண்மையும் அதுதான். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிடில் அவர்களது பர்ஸனாலிட்டி உண்மையான குணாதிசயம் கொண்டவரை அட்கொண்டுவிடும் அபாயம் உள்ளது எனவும் காட்டியிருப்பார்கள்.




மன அழுத்தம் குறித்து எடுக்கப்பட்ட படம்:


2012ஆம் ஆண்டு வெளியான படம் 3. பை-போலார் டிஸார்டர் எனப்படும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறுதியில் தன் வாழ்வை முடித்துக் கொள்வதுதான் இப்படத்தின்கதை. இதன் பின் உள்ள காரணம் குறித்து உங்களுக்கு தெரியுமா?


பல வருடங்களுக்கு முன்பு வரை வெளிநாடுகளில் மட்டுமே பேசப்பட்டு வந்த மனவியாதிகள் தொடர்பான பிரச்சனைகள் இன்று நம் நாட்டிலும், குறிப்பாக தமிழ் நாட்டிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 


நம்முடைய தினசரி வாழ்வில், நம்மிடம் தினசரி ‘ஹாய், ஹெலோ’ சொல்லும் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வரும். “ஐய்யோ..தினமும் நல்லா பேசுவாரே..ஏன் இப்படி தப்பான ஒரு முடிவை எடுத்துட்டாரு..” என சிலர் வருத்தத்துடன் கூறுவதுண்டு. அப்படி ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு பின்னால் உள்ள காரணம் குறித்து மேலோட்டமாக கூறிய படம்தான் 3.  


3 திரைப்படம்:


ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான படம் 3. தனுஷ் படத்தின் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ருதி ஹாசன். ‘வை திஸ் கொலவெறி’ பாடலையும், படத்தின் 1.30 நிமிட ட்ரெய்லரையும் பார்த்துவிட்டு ‘காதல் கதையாகத்தான் இருக்கும்’ என எதிர்பார்த்து போனவர்களை ‘சைக்கலாஜிக்கல்’ த்ரில்லராக மிரட்டிய படம் இது. தமிழ் சினிமாக்களில் படத்தின் முதல் சீனில் ஹீரோ என்ட்ரி கொடுப்பதுதான் வழக்கம், ஆனால் இப்படத்தில் தொடக்கத்தில் ஹீரோவான ராமின் பிணமே காண்பிக்கப்பட்டது. ராம் இறந்தது எப்படி? ஜனனியின் இந்த நிலைக்கு காரணம் என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளுடன் ப்ளேஷ் பேக்கிற்குள் நகர்கிறது திரைக்கதை. ராம்-ஜனனியின் பள்ளிக் காலத்து காதல், இருவரும் திருமணம் செய்து கொள்வதில் ஏற்படும் சிக்கல், கல்யாணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையேயான ஊடல்-கூடல் என கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மாற்றி மாற்றி காண்பித்து சினிமா ரசிகர்களை அசத்தினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இறுதியில், ராம் தற்கொலை செய்ததற்கு பை போலார் டிஸார்டர் எனப்படும் மனநோய்தான் காரணம் என தெரிய வருகிறது. 




பை போலார் டிஸார்டர் என்றால் என்ன?


பை போலார் டிஸார்டர் என்பது தமிழில், இருமுனையப் பிறழ்வு அல்லது இருதிருவக் கோளாறு எனக் கூறப்படுகிறது. இந்த நோய்க்கு, மரபியல் தொடர்பான விஷயங்கள் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது, இருமுனையப் பிறழ்வினால் பாதிக்கப்பட்டவரின் தலைமுறையில், அவரது தாத்தாவோ, கொள்ளுத் தாத்தாவோ ஏற்கனவே பாதிக்கப்பட்டிருப்பார். அப்படி மரபியல் வழியில் இந்நோய் ஏற்படாவிடில், அவர்கள் வாழ்ந்த சூழலும், அவர்களை சுற்றி நடக்கும் சூழ்நிலைகளுக்கும் இந்நோய்க்கு காரணமாக அமையும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


நோயின் அறிகுறிகள்


பை போலார் டிஸார்டர் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மூலை மிகுந்த ஆற்றல் நிறைந்த நிலையில் இருக்குமாம். கோபம், சோகம், காமம், வெறுப்பு என எந்த உணர்ச்சியாக இருந்தாலும், இவர்கள் அளவுக்கு அதிகமாகவே காண்பிப்பர் என்கிறார்கள். இவர்களால் யார் கண்ணையும் பார்த்து பேச இயலாது. 3 படத்தில் போ நீ போ பாடலில் தனுஷ் அவ்வப்போது கத்துவது போலவும், மருத்துவரிடம் பரிசோதனை செய்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் படத்தில் காண்பிக்கப்பட்டது போலவே, இந்நோய் உள்ளவர்களுக்கு கண் பார்வை குறைய ஆரம்பிக்கும் என்பது உண்மை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், தன்னையோ, தன்னை சுற்றி உள்ளவர்களையோ ஏதேனும் ஒரு விதத்தில் காயப்படுத்திக் கொள்வர். 


குணப்படுத்துவது எப்படி?


முதலில், பை போலார டிஸார்டரைக் குறித்து, இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களை சுற்றி உள்ளவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி செய்வதனால், சிகிச்சையின் போது ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க முடியும். இந்நோயினை, முழுமையாக குணப்படுத்த இதுவரை எந்த தீர்வும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், கவுன்சிலிங் மூலமாகவும், சில மருந்துகள் மூலமாகவும் இந்நோயை கட்டுப்படுத்தலாம் என சில மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பை போலார் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் தன்மையின் தீவரத்தை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


மனநோய் அல்லது மன அழுத்தம் தொடர்பான விழிப்புணர்வு இந்தியாவில் இப்போதும் கூட மிகக்குறைவாகவே இருக்கிறது. மன அழுத்தம் ஏற்படும்போது நிச்சயம் தகுந்த நிபுணர்களை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்