மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோற்றுப்போனது. பாகிஸ்தான் அணி இந்திய அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இது குறித்து கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர் கூறுகையில், போட்டியின் நடுவே நாங்கள் மற்ற பேட்ஸ்வுமன்களுக்கும் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அது தான் இந்த பாதிப்புக்கு காரணம் என நினைக்கிறேன். 138 என்ற இலக்கு நிச்சயமாக எட்டக்கூடிய இலக்கு தான். மிடில் ஓவர்களில் சரியாக விளையாடவில்லை. என்னைப் பொருத்தவரையில் உலகக் கோப்பைக்கு வரும் முன்னர் கடினமான பயிற்சிகள் தேவை. எந்த ஒரு அணியையும் சாதாரணமாக எடைபோட்டுவிடக் கூடாது. சில ஏரியாக்களில் நாங்கள் தீவிரமாக எங்களையே சீர்தூக்கிப் பார்த்து சரி செய்ய வேண்டியுள்ளது என்றார்.
;
பரபரப்பான ஆட்டம்:
வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரத்தில் மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 13வது போட்டியில் இந்தியா – பாகிதஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு உள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி சில்ஹெட் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷபாலி வர்மா, மேக்னா சிங் இடம்பெறவில்லை.
138 எனும் இலக்கு: பாகிஸ்தான் அணியை பொருத்தவரை, நிடா டார் 37 பந்துகளில் ஐந்து பவுண்ட்ரி மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 56 ரன்கள் விளாசினார். மரூஃப் 32 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் குறிப்பிடும் படியான ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை.
இந்திய அணியை பொறுத்த வரையில் சிறப்பாக பந்து வீசிய தீப்தி ஷர்மா நான்கு ஓவர்களில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து, மூன்று விக்கெட்டுகள் எடுத்தார். பூஜா வஸ்ட்ராக்கர் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய அணி மொத்தம் 6 பவுலர்களைக் கொண்டு இந்த போட்டியில் விளையாடியது. தொடக்க ஓவர்களில் சொதப்பி வந்தாலும், இருபது ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் பெண்கள் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. இந்திய பெண்கள் அணிக்கு 138 ரன்கள் இலக்கினை பாகிஸ்தான் பெண்கள் அணி நிர்ணயித்தது. தொடர்ந்து ஆடிய பெண்கள் அணி பேட்டிங்கில் சொதப்பியதால் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.