மெய்யழகன்


பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி அரவிந்த் சாமி நடித்துள்ள படம் மெய்யழகன். ஸ்ரீதிவ்யா , ராஜ்கிரண் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கிராமத்து கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் கார்த்தியின் சினிமா கரியரில் மிக முக்கியமான படமாக அமையும் என்று பலர் கூறி வருகிறார்கள். இப்படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்திற்கு இணையான முக்கியத்துவம் அரவிந்த் சாமி கதாபாத்திரத்திற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த அரவிந்த் சாமி சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தில் இவர் நடித்த சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் மிகப்பெரிய கம்பேக் ஆக அமைந்தது. தொடர்ந்து போகன் , பாஸ்கர் ஒரு ராஸ்கல் , செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனி ஒருவன் அரவிந்த் சாமியின் மாறுபட்ட பரிமாணத்தைக் காட்டியதைப்போல் மெய்யழகன் படம் அவரது மற்றொரு பக்கத்தை காட்டும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்


ரசிகர் மன்றம் எதற்கு ?


மெய்யழகன் படத்தின் ப்ரோமோஷன்களில் கலந்துகொண்டு வரும் அரவிந்த் சாமி பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த  மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருந்ததாகவும் ஆனால் படப்பிடிப்பிற்கு நேரம் கிடைக்காத காரணத்தினால் இந்தப் படத்தில் தான் நடிக்க முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ரசிகர் மன்றங்கள் குறித்து அரவிந்த் சாமி பேசியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. எனக்கு ஒரு ரசிகர் மன்றம் வைத்தால் அதனால் அந்த ரசிகர்களுக்கு ஏதாவது பயன் இருக்கிறதா. நான் நாளைக்கு என்ன வேண்டுமானால் செய்வேன். நான் சினிமாவில் இருக்கலாம் இல்லாமல் போகலாம் அப்போது அவர்கள் என்ன செய்வார்கள் . எனக்கு இருக்கும் இன்னொரு கேள்வி என்னவென்றால் என் பையன் என்னிடம்  வந்து அவன் ஒரு ரசிகர் மன்றத்தில் சேரப்போவதாக சொன்னால்  நான் அவனிடம் படத்தைப் பார்த்து ரசிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளச் சொல்வோம். என் மகனுக்கு இப்படி அட்வைஸ் செய்துவிட்டு ஊரான் விட்டு மகனை நான் எப்படி ரசிகர் மன்றத்தில் சேர எப்படி ஊக்குவிக்க முடியும்” என அரவிந்த் சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.