நடிகை மேக்னாராஜ் தனது கணவர் மற்றும் மகனின் பெயரை பச்சைக்குத்தியுள்ளார்.
நடிகை மேக்னா ராஜ் மறைந்த தனது கணவர் சிரஞ்சீவி சர்ஜா மற்றும் ராயன் ஆகியோரின் பெயர்களை தனது மணிக்கட்டில் டாட்டூ குத்தியுள்ளார். அது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர் “ என் நிரந்தரம் ” என்று பதிவிட்டு இருக்கிறார்.
தமிழில் ‘ காதல் சொல்ல வந்தேன்’, ‘உயர்திரு 420’, ‘நந்தா நந்திதா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த கன்னட நடிகை மேக்னா ராஜ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் அர்ஜுனின் உறவினரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னா ராஜும் இணைந்து நடித்த சில படங்கள் வெற்றிகரமாக ஓடின. மேக்னா ராஜ் கர்ப்பமான நிலையில், கடந்த ஜூன் மாதம் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவர் மறைந்தபோது, மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இளம் நடிகரின் இந்த திடீர் மரணம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனால் மனமுடைந்து இருந்த மகளுக்கு தந்தை சுந்தர்ராஜ் கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட்டவுட்டுடன் வளைகாப்பு நடத்தியது பலரையும் உருக வைத்தது. அவர் மறைவை அடுத்து மேக்னா ராஜ் வெளியிட்டிருந்த உருக்கமானப் பதிவில், ‘நம் காதலின் அடையாளமாக விலைமதிக்க முடியாத பரிசை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். அது நம் குழந்தை’ என்று கூறியிருந்தார். இவருக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் மேக்னா 2 ஆவது கல்யாணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு அண்மையில் பதிலளித்த மேக்னா ராஜ், “ கணவர் இறந்த பின்பு, குழந்தையை வளர்ப்பது மற்றும் அவனது எதிர்காலம் பற்றிய சிந்தனையில் இருக்கிறேன். ஒரு கூட்டம் 2 ஆவது திருமணம் செய்ய சொல்கிறது. சிலர் உங்கள் மகனுடன் மகிழ்ச்சியாக இருங்கள் என்று சொல்கிறார்கள். நான் எதை கேட்பது? ஆனால் நான் அந்த கேள்வியை என்னிடம் கேட்க வில்லை. என் கணவர் இந்த தருணத்தை வாழ வேண்டும் என்பார். அதனால் நாளை பற்றி நான் யோசிப்பதில்லை” என்று பேசியிருந்தார்.