தன்னுடைய கணவரான சிரஞ்சீவியின் பிறந்தநாளன்று இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத த்ரில்லர் படத்தில் அவர் நடிக்கவுள்ளார். பனகா பரானா தயாரிப்பில் இந்தப்படம் உருவாகவுள்ளது.
இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மேக்னா, '' இதைவிட சிறந்தநாள் எதுவுமில்லை. இன்று உன் பிறந்தநாள். இது உன் கனவு. இது உனக்காக. ஒரு வீட்டுக்குள் இருப்பதாகவே உணர்கிறேன். கேமரா ரோலின் ஆக்ஷன் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள தயாரிப்பாளர், ''அன்பான சிரு, உன் பிறந்தநாளுக்கு நம்முடைய கனவை நான் ஒரு கிப்ட் கொடுக்கிறேன். இந்த கொண்டாட்டத்துக்கு எப்போதும் நீ ஒரு காரணம் என தெரிவித்துள்ளார்
கடந்த 2018-ம் ஆண்டு மேக்னா ராஜ், நடிகர் அர்ஜுனின் உறவினரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னா ராஜும் இணைந்து நடித்த சில படங்கள் வெற்றிகரமாக ஓடின. மேக்னா ராஜ் கர்ப்பமான நிலையில், கடந்த ஜூன் மாதம் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவர் மறைந்தபோது, மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இளம் நடிகரின் இந்த திடீர் மரணம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனால் மனமுடைந்து இருந்த மகளுக்கு தந்தை சுந்தர்ராஜ் கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட்டவுட்டுடன் வளைகாப்பு நடத்தியது பலரையும் உருக வைத்தது. அவர் மறைவை அடுத்து மேக்னா ராஜ் வெளியிட்டிருந்த உருக்கமானப் பதிவில், ‘நம் காதலின் அடையாளமாக விலைமதிக்க முடியாத பரிசை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். அது நம் குழந்தை’ என்று கூறியிருந்தார். இவருக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை செல்லமாக சிண்ட்டு என அழைத்து வந்தனர்.