தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை மேகா ஆகாஷ். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறியப்பட்ட நடிகையாக இருக்கிறார். சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகை மேகா ஆகாஷுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் நடிகை சிம்ரன் மகளாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து சிம்பு ஜோடியாக 'வந்தா ராஜாவா தான் வருவேன்', தனுஷ் ஜோடியாக 'எனை நோக்கி பாயும் தோட்டா', சந்தானம் ஜோடியாக 'வடக்குப்பட்டி ராமசாமி', அதர்வா முரளி ஜோடியாக 'பூமராங்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடித்திருந்தார். படம் பெரிய அளவில் வரவேற்பை பெற தவறினாலும் மேகா ஆகாஷ் நடிப்பு வரவேற்பை பெற்றது.
அவ்வப்போது படங்களில் நடித்து வந்த மேகா ஆகாஷ் தனது நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணு என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் நேற்று மிகவும் எளிமையாக கேரளாவில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.
மேகா ஆகாஷ் பகிர்ந்துள்ள நிச்சயதார்த்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.