பட்டியல் இன மக்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்திருந்த நடிகை மீராமிதுன் தலைமறைவாக உள்ளதாக சென்னை அமர்வு நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையினை சென்னை அமர்வு நீதிமன்றம் செப்டம்பர் மாதம் 14ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் தெரிவித்துள்ளது. 


ஒவ்வொரு துறையிலும் சர்ச்சைக்கு பெயர் போனவர்கள் என்ற சிறப்பு பெயரினை ஒரு சிலர் பெற்றிருப்பர். அந்த வகையில் தமிழ் சினிமா வட்டாரத்தில் இருக்கும் ஒருவர், நடிகை மீராமிதுன். தான் நடித்த படங்கள் மூலம் பிரபலமானவர் என்று இவரை சொல்வதை விட வாயைக் கொடுத்து வம்பை வாங்கிக்கொள்பவர் என்றுதான் சொல்ல வேண்டும். 


8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் குணசித்திர வேடத்தில் மட்டுமே நடித்துள்ளவர் மீரா மிதுன்.  பிரபல முன்னனி தொலைகாட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான, ஜோடி நம்பர் 1 மற்றும் பிக்பாஸ் ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் மக்களிடையே பிரபலமானவர். இந்த நிகழ்ச்சி மூலம் ஓரளவுக்கு இந்த நிகழ்ச்சிகளின் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு கிடைத்தாலும், இயக்குநர் சேரன் குறித்து இவர் கிளப்பிய பிரச்சனையால் இவருக்கு  வாக்குகள் குறைந்தது மட்டும் இல்லாமல் மீரா மிதுன் வெளியேறவும் காரணமாக அமைந்தது.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகும் ஏதாவது சர்ச்சையாக பேசி தொடர்ந்து பரபரப்பில் ஊடகங்களில் இவர் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் பட்டியல் இன மக்கள் குறித்து, அவதூறாகப் பேசி சமூகவலைதளத்தில் இவர் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, இவரது வீடியோவுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் காவல்துறையில் இவர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஏழு பிரிவுகளின் மீது வழக்கு பதியப்பட்டபோதும், இந்த வழக்கில் மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டது. நிபந்தனை ஜாமீன் கிடைத்த போதும், பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில நீதிமன்றம் குறிப்பிடும் தேதியில், விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இவருக்கு, சாட்சி விசாரணைக்காக ஆஜர் ஆகச்சொல்லி பல முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜர் ஆகாததால், 2 ஆவது முறையாக மீரா மிதுனுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து இவரது வழங்கறிஞரும் நீதிமன்றத்தில் ஆஜராகததால், அவருக்கும் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


பிடிவாரண்ட் பிறப்பித்த பின்னரும், நீதிமன்றத்தில் ஆஜராகமல் நடிகை மீராமிதுன் தலைமறைவாக உள்ளார். தலைமறைவாக உள்ள நடிகை மீராமிதுனை மிக விரைவில காவல்துறை கைது செய்யும் என காவல்துறை தரப்பில் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையினை வரும்  செப்டம்பர் மாதம் 14ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.