பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியக் குடும்பம் ஒன்று, தங்கள் வீட்டில் சிலை வைத்து கவனம் ஈர்த்துள்ளது.


1970கள் தொடங்கி இந்தி சினிமாவில் கோலோச்சி வரும் நடிகர் அமிதாப் பச்சன் இந்திய சூப்பர் ஸ்டார்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். தற்போது 79 வயதாகும் அமிதாப் பச்சனுக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.


இந்நிலையில் முன்னதாக அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள எடிசன் சிட்டியில் வசிக்கும் ரிங்கு - கோபி எனும் இந்தியத் தம்பதியினர் தங்கள் வீட்டில் அமிதாப் பச்சனுக்கு சிலை வைத்து அவரைப் பெருமைப்படுத்தியுள்ளனர்.


 






அமெரிக்காவில் கணிசமான இந்தியர்கள் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் இந்த சிலை முன்னதாகத் திறந்து வைக்கப்பட்டது. கண்ணாடிப் பெட்டிக்குள் பாதுகாத்து வைக்கப்பட்டு இந்த சிலை நிறுவப்பட்டுள்ள நிலையில், சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.


இந்த சிலையை நிறுவ சுமார் 75 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் மொத்தம் 60 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர். இந்நிலையில், தன்னையும் தன் மனைவியையும் பொறுத்தவரை அமிதாப் பச்சன் கடவுளுக்கு கொஞ்சமும் குறைந்தவரில்லை என சிலையை நிறுவியுள்ள கோபி சேத் தெரிவித்துள்ளார்.


முன்னதாக அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர் தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.


 






ட்விட்டரில் தினசரி குறிப்புகள் எழுதுவதை அமிதாப் பச்சன் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். 
அமிதாப் பச்சன் நடிப்பில் விரைவில் பிரம்மாஸ்திரா படம் வெளியாக உள்ளது.


 






மேலும் சின்னத்திரையில் அமிதாப் ஏற்று நடத்தி பிரபலப்படுத்திய கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியின் 14ஆவது சீசன் தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.