‘பெண்களை யாரும் சாதாரணமாக நினைக்காதீர்கள்’  என்பதையும் ’மக்களை நீங்கள் நேசித்தால் அவர்கள் உங்களை நேசிப்பார்கள்’ என்பதையும் சொல்லும் படம்தான் ‘தலைவி’


சட்டப்பேரவையில் கீழே தள்ளப்பட்டு, சேலை பிடித்து இழுக்கப்பட்டு அவமானப்படுத்தப்படும் ஜெயலலிதா, இனி முதலமைச்சராகத்தான் சட்டப்பேரவைக்குள் வருவேன் என சூளுரைக்கும் காட்சியில் தொடங்கி, அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கட்சியினர் ’குனிந்து கும்பிடுபோடும்’ காட்சியில் முடிகிறது படம்.


ஜெயலலிதாவாக – கங்கனா ரணாவத், எம்.ஜி.ஆராக – அரவிந்த்சாமியும், - ஆர்.எம்.வீரப்பனாக – சமுத்திரக்கனியும், கருணாநிதியாக – நாசரும், சசிகலாவாக – பூர்ணாவும், ஜெயலலிதா உதவியாளராக தம்பி ராமய்யாவும் நடித்திருக்கிறார்கள்.


இந்த திரைப்படத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆரை காட்டிலும் ஆர்.எம்.வீரப்பனாக நடிக்கும் சமுத்திரக்கனி பாத்திரம்தான் கவனிக்க வைக்கிறது. எம்.ஜி.ஆருடன் எந்த நடிகையும் நெருங்கி பழகிவிடக்கூடாது என்பதில் தொடக்கத்தில் இருந்தே கவனமாக இருக்கும் ஆர்.எம்.வீரப்பன், முதலில் எம்.ஜி.ஆருடன் நெருங்கி பழகத் தொடங்கும் ரெஜினாவை படத்தை விட்டே விரட்டுகிறார். அதன்பின்னர், ஜெயலலிதாவான கங்கனா ரனாவத்தும், எம்.ஜி.ஆரான அரவிந்த்சாமியும் திரைப்பட காட்சிகளை தாண்டி நெருங்கத் தொடங்கும்போது ஆர்.எம்.வீரப்பனால் அதனை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.


எம்.ஜி.ஆரையும் – ஜெயலலிதாவையும் பிரிக்க தன் முகபாவனைகளாலேயே திட்டம் தீட்டுகிறார் ஆர்.எம்.வீரப்பன். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரை சந்திக்க செல்லும் ஆர்.எம்.வீரப்பனை, சந்திக்கவிடாமல் தடுக்கும் ஜெயலலிதா, பல மணிநேரம் அவரையும் எம்.ஜி.ஆரை காண வந்தவர்களையும் காக்க வைக்கிறார். பின்னர் அறையில் இருந்து வெளியில் வரும் ஜெயலலிதாவிடம் இவ்வளவு நேரம் என்ன செய்தீர்கள் என்று கேட்டதற்கு ‘மெதுவடை’ என சொல்லி நக்கல் செய்து,  ’மெதுவடை எப்படி செய்றது அப்டின்னு பேசிக்கிட்டு இருந்தோம்’ என கவுன்ட்டர் கொடுப்பார்.


அதன்பிறகு இந்த ’மெதுவடை’ ஆர்.எம்.வீரப்பனை தூங்கவிடாது. ‘திருப்பிக் கொடுக்கனும் சிவாஜி’ என்று ஒரு பருப்பு வடையாவது ஜெயலலிதாவிற்கு திரும்ப கொடுத்துவிடவேண்டும் என தீவிரமாக இயங்கத் துவங்குவார் ஆர்.எம்.வீரப்பனான சமுத்திரகனி. அடுத்த நாள் ஷூட்டிங்கு வரும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை பார்க்க அவரது அறைக்கு செல்ல முற்படுவார்.


இப்போது சமுத்திரக்கனியான ஆர்.எம்.வீரப்பன், ஒரு முக்கியமான விஷயம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லி ஜெயலலிதாவை வெளியே காக்க வைத்துவிடுவார். சிறிது நேரம் கழித்து வெளியே வரும் ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவிடம்  செக்கை கொடுத்து ’நேற்றோடு உன்னுடைய ரோல் முடிந்துவிட்டது, படத்தில் உன்னை கொன்றுவிட்டேன், இனி தமிழ் படங்களில் நீ நடிக்கவே முடியாது. வேண்டுமென்றால் தெலுங்கு, கன்னடம் படங்களில் போய் வாய்ப்புத் தேடு’ இல்லையெனில், ’வீட்ல மெது வட சுட்டு சாப்டு’ என சொல்லி அதே மெது வடையை திருப்பிக் கொடுப்பார். நேற்று தான் கொடுத்த மெது வடையையே தனக்கு இப்போது வீரப்பன் திருப்பி கொடுத்ததை ஜெயலலிதாவால் தாங்கிக்கொள்ள முடியாது. வடை சுட்டு ஒரு நாள் ஆகியிருக்கும் என்பதால் அந்த வாடை ஜெயலலிதாவான கங்கனாரனாவத்தை போட்டு வாட்டும்.



இதனை எம்.ஜி.ஆரிடம் முறையிட்டுவிட்டு எதுவும் நடக்காததால் அப்செட்டான ஜெயலலிதா வீட்டிற்கு சென்று, சிவாஜிகணேசனை பற்றி புகழ்ந்து ஒரு பிரஸ் மீட் கொடுப்பார். அதன்பிறகு சிவாஜியோடு நடிக்கும் வாய்ப்பு வரத் தொடங்கும், எம்.ஜி.ஆர் வேறு நாயகிகளுடன் நடிக்கும் படத்திற்கு பெரிய ஆதரவு இருக்காது.


இதனால், ஜெயலலிதா வீடு தேடி வரும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை மீண்டும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிக்க சம்மதிக்க வைப்பார். இதில் மகிழ்ச்சியடையும் ஜெயலலிதா மீண்டும் தன்னுடைய ‘மெது வடை’  ரெசிபியை கையிலெடுப்பார்.


இந்த முறை வெறும் வார்த்தையால் ‘மெது வடை’ என சொல்லாமல், ஒரு பார்சலில் ஆர்.எம்.வீரப்பனான சமுத்திரகனி இல்லத்திற்கே ‘மெது வடையை’ அனுப்பிவைப்பார். அந்த பார்சலை பிரித்து ‘மெதுவடையை’ எடுத்துப் பார்க்கும் ஆர்.எம்.வீரப்பனுக்கு முகத்தில் ஈ ஆடாது.  கையில் வைத்து அப்படியே அந்த மெதுவடையை பார்த்துக்கொண்டிருக்கும் அவர், ஒரு கட்டத்தில் ’லபக்’ கென்று அதை சாப்பிட்டு தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொள்வார் என்றே படம் பார்க்கும் ரசிகர்கள் நினைக்கும்போது, அந்த மெது வடையை சாப்பிடாமல் வெகுநேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டே இருப்பார்.


ஏனென்றால், ஜெயலலிதா அனுப்பிய அந்த மெதுவடை பார்ப்பதற்கு அப்படியெல்லாம் ஒன்றும் உடனே  சாப்பிடவேண்டும் என்பதுபோல இருக்காது. எண்ணெய் குடித்து, காய்ந்துபோய், ஒரு ஷேப்பே இல்லாமல் இருக்கும். உண்மையில் அது மெதுவடை தானா என்றே ஆர்.எம்.வீரப்பனுக்கு சந்தேகம் வந்திருக்கும். அதனால்தான் அந்த வடையை சாப்பிடவும் முடியாமல், தூக்கி வீசவும் முடியாமல் கையில் வைத்து அதனை ஆராய்ந்திருப்பார்.


இப்படி இந்த தலைவி படத்தில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், ஆர்.எம்.வீரப்பன், கருணாநிதி உள்ளிட்டோருக்கு நிகராக ஒரு சாதாரண ‘மெது வடைக்கும்’ இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் ஏன் இயக்குநர் மெது வடையை தேர்வு செய்தார் என்றும், பருப்பு வடை என்ன பாவம் செய்தது எனவும் பருப்பு வடை பிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


தலைவி பார்ட் 2 எடுத்தால், அதில் பருப்பு வடை சுடுவது குறித்துதான் சீன் வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.  இயக்குநர் ஏ.எல்.விஜய் பருப்பு வடை பிரியர்களின் கோரிக்கயை நிச்சயம் பார்ட் 2-வில் பரிசீலிப்பார் என நம்புவோம்..!