நடிகர் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான பொம்மை நாயகி படம் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. 


தமிழ் சினிமாவில் யோகி பாபு, ஹரிகிருஷ்ணன் அன்பு துரை, ஜி எம் குமார், சுபத்ரா மற்றும் ஸ்ரீமதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்ற திரைப்படம் பொம்மை நாயகி. அறிமுக இயக்குநர் ஷான் இயக்கத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி வெளியானது. 


தேநீர் கடை தொழிலாளியான வேலு (யோகி பாபு), தனது மனைவி கயல்விழி (சுபத்ரா), 9 வயது மகள் பொம்மை நாயகி (ஸ்ரீமதி) ஆகியோருடன் சொற்ப வருமானத்தில் மகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் வாழ்ந்து வருகிறார். இந்த எளிய குடும்பத்தை ஒரு சம்பவம் புரட்டிப்போடுகிறது. கோயில் திருவிழாவில் காணாமல் போகும் மகளைப் பதைபதைப்புடன் தேடிச் செல்லும் வேலு, அவளை மயங்கிய நிலையில் கண்டெடுக்கிறார். மகளுக்கு நடந்த கொடுமையின் துயரை மனதில் புதைத்துக்கொள்ளும் வேலு, ஒரு கட்டத்தில் குமுறி எழுகிறார். அதன்பின் குற்றவாளிகளை சமூகமும் சட்டமும் நீதியும் எப்படிக் கையாண்டன? சாமானியத் தந்தையான வேலுவின் போராட்டம் வென்றதா,இல்லையா என்பது கதையாக அமைக்கப்பட்டிருந்தது.


படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் எதார்த்தமான நடிப்பை பதிவு செய்து பாராட்டுகளை பெற்ற இந்த திரைப்படம் உலக கொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆமாம், வரும் நாளை (ஜூலை 9ம் தேதி) மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பரபரப்பான காட்சிகள், பதைபதைக்க வைக்கும் கதை நகர்வு, அப்பாவாக யோகி பாபுவின் எதார்த்தமான நடிப்பு என பாராட்ட வேண்டிய பல விசயங்களை கொண்டது பொம்மை நாயகி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.