தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் ரசிகர்கள் பலருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மயில்சாமியின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மயில்சாமியின் கனவு:
1984ம் ஆண்டு தாவணி கனவுகள் மூலமாக தமிழில் அறிமுகமான மயில்சாமி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். திரைத்துறையில் கடினமாக உழைத்து முன்னேறிய குணச்சித்திர நடிகர்களுக்கு தங்களது வாரிசுகளை ரசிகர்கள் கொண்டாடும் மாபெரும் கதாநாயகனாக மாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருக்கும். அந்த ஆசை மயில்சாமிக்கும் இருந்தது. ஆனால்..?
மயில்சாமிக்கு அருமைநாயகம் என்ற மகன் உள்ளார். இவரை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்று மயில்சாமிக்கு மிகப்பெரிய ஆசை. இதன் காரணமாக, தமிழ் திரையுலகில் குடும்ப படங்களை எடுத்து கிராமத்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற ராசு மதுரவன் இயக்கத்தில் தனது மகனை நடிக்க வைக்க ஏற்பாடு செய்தார். அருமைநாயகம் என்ற தனது மகனின் பெயரை அன்பு என்று சினிமாவிற்காக மாற்றினார்.
மகனை நாயகனாக்கிய மயில்சாமி:
அப்போது, ராசு மதுரவனுக்கு நல்ல மார்க்கெட் இருந்த நிலையில், அவரது இயக்கத்தில் 2011ம் ஆண்டு பார்த்தோம் பழகினோம் என்ற படம் தயாரானது. இதில் அருமைநாயகத்திற்கு ஜோடியாக ஜோஷ்னா பெர்னாண்டோ என்பவர் நாயகியாக நடித்தார். ஆனால், படம் தொடங்கப்பட்ட சில நாட்களிலே படம் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, கடந்த 2015ம் ஆண்டு ராஜசேகர் என்ற இயக்குனர் இயக்கத்தில் அந்த 60 நாட்கள் என்ற படத்தில் அன்பு நாயகனாக நடித்தார். நகைச்சுவை திரைப்படமாக உருவாகிய இந்த படம் கடைசி வரை வெளியாகவில்லை.
அதேபோல, அதே ஆண்டு ஜான்சன் இயக்கத்தில் கொக்கு என்ற படத்தில் அன்பு நாயகனாக நடித்தார். தற்போது பாண்டவர் இல்லம் சீரியலில் நாயகியாக நடித்து வரும் பாப்ரி கோஷ் நாயகியாக நடித்த இந்த படமும் கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும், மனம் தளராத அன்பு கடந்த 2017ம் ஆண்டு திரையில் நாயகனாக அறிமுகமாவதற்காக திரிபுரம் மற்றும் ஒரு பொம்மலாட்டம் நடக்குது என்ற படங்களில் நடித்தார். ஆனால், அந்த இரு படங்களுமே அடுத்தகட்டத்தை நோக்கி நகரவில்லை.
நிறைவேறுமா?
வெள்ளித்திரையில் நாயகனாக நடிக்கும் தனது முயற்சி தோல்வியை தழுவிய நிலையில், ஓடிடியில் நாயகனாக நடிக்கும் முயற்சியை அன்பு எடுத்தார். கடந்த 2020ம் ஆண்டு எம்.எஃப். ஹூசைன் இயக்கத்தில் உருவான அல்டி என்ற படத்தில் அன்பு நாயகனாக நடித்தார். 9 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு மயில்சாமியின் மகன் அன்பு நாயகனாக நடித்த அல்டி படம் ஓ.டி.டி.யில் வெளியானது. தனது மகனை மிகப்பெரிய நாயகனாக்க வேண்டும் என்ற மயில்சாமியின் ஆசை நிறைவேறுமா? என்பதை அன்பும், அவரது உழைப்பும், காலமும் தீர்மானிக்கும். ஆனால், தனது மகனை மக்கள் கொண்டாடும் நாயகனாக காணும் மயில்சாமியின் ஆசை நிறைவேறாமல் போனது சோகமே ஆகும்.
மேலும் படிக்க: Actor Mayilsamy Death: "மயில்சாமி மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு.." ஆளுநர், பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்
மேலும் படிக்க: Mayilsamy Politics: எம்.ஜி.ஆர். பக்தன்... சமூக சேவகன்! - கொடைவள்ளல் மயில்சாமியின் அரசியல் பார்வை எப்படி?