தன்னுடைய படங்கள் என்றாலே மாஸ்டர் மகேந்திரன் படமா? என்று முத்திரை குத்துகிறார்கள் என்று மகேந்திரன் கூறியுள்ளார்.


மாஸ்டர் மகேந்திரன்


1994ஆம் ஆண்டு சரத்குமாரின் நாட்டாமை படத்தில் அறிமுகமானவர் நடிகை மகேந்திரன். இதனைத் தொடர்ந்து நடிகர் பாண்டியராஜூடன் அவர் நடித்த தாய்க்குலமே தாய்க்குலமே படத்தில் அவர் நடித்து பிரபலமானார். இந்த படத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தமிழ்நாடு அரசின் மாநில விருது அவருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாப்பிள்ளை, கோபாலா கோபாலா , காதலா காதலா உள்ளிட்டப் படங்களில் நடித்தார்.


மாஸ்டர்


குழந்தை நட்சத்திரமாக கலக்கிய மாஸ்டர் மகேந்திரனுக்கு போதிய அளவு திரைப்பட வாய்ப்புகள் அமையவில்லை. விழா ஆனந்தம், விந்தை, திட்டி வாசல் , நாடோடி கனவு , விரைவில் ஆசை உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்தப் படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் பவானி என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் மகேந்திரன். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து சிதம்பரம் ரயில்வே கேட், நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு ,மாறன் , ரிபப்ரி உள்ளிட்டப் படங்களில் நடித்தார்.


இந்தப் படங்கள் சரியாக ஓடவில்லை. அடுத்தபடியாக அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ஜெய் நடித்த லேபிள் வெப் சீரிஸின் மகேந்திரன் நடித்து மிரட்டியிருந்தார். தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தாலும் இந்த தொடர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது இந்த தொடரை பெரிய அளவில் மக்களைச் சென்று சேராமல் தடுத்தது. இப்படியான சூழலில் மகேந்திரன் தற்போது நடித்துள்ள படமே அமிகோ கராஜ். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மகேந்திரன் உணர்ச்சிவசமாக பேசி மேடையில் கண் கலங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


என்னுடைய படங்களுக்கு முத்திரை குத்துறாங்க


 மேடையில் பேசிய மகேந்திரன் “ கொரோனா காலத்தில் திரையரங்கங்கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன. எல்லாரும் ஓடிடி தளத்திற்காக படங்களை எடுக்க தொடங்கிவிட்டார்கள். இப்படியான ஒரு சூழலில் தியேட்டருக்காக ஒரு படத்தை எடுக்க முடிவு செய்தோம். ஆனால் மாஸ்டர் மகேந்திரன் படமா? என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். மூன்று வருடம் முடிந்துவிட்டது. எப்படியோ இந்தப் படத்தை போராடி ரிலீஸ்வரை கொண்டு வந்துவிட்டேன். எனக்காக இந்தப் படத்தை யாரும் பார்க்க வேண்டாம்.


எனக்கு பின்னால் பல நபர்கள் தங்களது உழைப்பை இந்தப் படத்திற்காக கொடுத்திருக்கிறார்கள். மலையாளப் படங்களுக்கு எல்லாம் இங்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்த மகேந்திரன் படத்தை 2 மணி நேரம் செலவிட்டு பாருங்கள் “ என்று அவர் கேட்டுக் கொண்டார். பேசிக் கொண்டிருந்த போதே அவர் கண்கள் கலங்கினார், அமிகோ கராஜ் படம் வரும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது .