மார்வெல் நிறுவனத்தின் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் படம் தொடர்பான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, அவதார் தி வே ஆஃப் வாட்டர் மற்றும் ஸ்னோபியர்சர் தொலைக்காட்சி சீரிஸில் எழுத்தாளராக பணியாற்றிய நபர், ஃபெண்டாஸ்டிக் ஃபோர் படத்திற்கான எழுத்தாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஃபெண்டாஸ்டிக் ஃபோர்:
மார்வெல் நிறுவன காமிக்ஸ் புத்தகங்களில் இடம்பெற்ற முதல் குடும்பமான ஃபெண்டாஸ்டிக் ஃபோர் தொடர்பான, திரைப்படம் வரும் 2025ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனராக மார்வெலின் பெரும் வெற்றி பெற்ற சீரிஸான வாண்டா விசனின் இயக்குனரான, மாட் ஷேக்மான் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த படம் தான் மார்வெல் நிறுவனத்தின் 6ம் கட்டத்தை தொடங்கி வைக்க உள்ளது.
புதிய எழுத்தாளர் நியமனம்:
ஃபெண்டாஸ்டிக் ஃபோர் படம் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கான ஒரு சிறிய டீசராக டாக்டர் ஸ்ட்ரேஞ் 2 திரைப்படத்தில் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் குழுவின் தலைவரான ரீட் ரிச்சர்ட்ஸ் கதாபாத்திரத்தில் ஜான் கிரசன்ஸ்கி சிறிய கேமியோ செய்து இருந்தார். இதனிடையே, ஃபெண்டாஸ்டிக் ஃபோர் படத்திற்கான கதையை ஜெஃப் கெப்லான் மற்றும் இயான் ஸ்ப்ரிங்கர் ஆகியோர் எழுதி வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் நீக்கப்பட்டு, அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் மற்றும் ஸ்னோபியர்சர் தொலைக்காட்சி சீரிஸிற்கு இணை எழுத்தாளராக பணியாற்றிய ஜோஸ் ஃப்ரைட் மேன் புதிய எழுத்தாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
60-களில் அறிமுகமான ஃபெண்டாஸ்டிக் ஃபோர்:
அண்மையில் 20த் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தை கைப்பற்றிய பிறகு, ஃபெண்டாஸ்டிக் ஃபோர் கதாபத்திரங்களின் உரிமம் மீண்டும் மார்வெல் நிறுவனத்திடம் வந்தது. 1961ம் ஆண்டு தான் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, முதல் காமிக்ஸ் புத்தகம் வெளியானது. அதைத்தொடர்ந்து தான் அவெஞ்சர்ஸ் காமிக்ஸ் கதைகள் வெளியாகின.
அவெஞ்சர்ஸின் பெரும்பாலான கதைகளில் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் குழு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்நிலையில், ஃபெண்டாஸ்டிக் ஃபோர் குழுவிற்கு புதிய படம் வெளியாக இருப்பது, மார்வெல் நிறுவனத்தின் 6ம் கட்ட திரைப்படங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்வெல் 2023 திரைப்படங்கள்:
சூப்பர் ஹீரோக்களை கொண்டு உலகை காப்பாற்றும் கதைக்களத்தை மட்டுமே கருவாக கொண்டு திரைப்படங்களை வெளியிட்டு வரும் மார்வெல் நிறுவனம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளது. இந்நிலையில், அண்மையில் அந்த நிறுவனத்தின் ஆண்ட்-மேன் அண்ட் தி வாஸ்ப்: குவாண்டமேனியா திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அதைதொடர்ந்து, மே மாதம் கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3, கோடை காலத்தில் லோகி சீசன் 2, நவம்பர் 10ம் தேதி தி மார்வெல்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள் வெளியாக உள்ளன.