பிரபல ஹாலிவுட் படத்தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. குறிப்பாக, மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சூப்பர்ஹீரோக்கள் படங்களுக்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவெஞ்சர்ஸ் வரிசைப் படங்கள் இதற்கு முக்கிய பங்காற்றின.
மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோக்களில் மிகவும் முக்கியமான சூப்பர் ஹீரோ ஹல்க் ஆவார். யாராலும் கட்டுப்படுத்த முடியாத கோபத்திற்கு சொந்தக்காரராக உலா வரும் ஹல்க், அவெஞ்சர்ஸ் எண்ட்கேமில் மிகவும் சாதுவான மனிதராக மாறிவிடுவார்.
இந்த நிலையில், மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனம் ஷீ ஹல்க் என்ற வெப்சீரிசை உருவாக்கியுள்ளது. இந்த சீரிசின் ட்ரெயிலர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஷீ ஹல்க்கின் ட்ரெயிலர் காட்சிகளில் ப்ரூஸ் பேன்னராகிய ஹல்க் ஜெனிபர் என்ற பெண் ஹல்க்கிற்கு கோபத்தை கட்டுப்படுத்த பயிற்சி அளிக்கிறார். பேனர் ஹல்க்கை காட்டிலும் புத்திசாலியான ஹல்க்காக பெண ஹல்க் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜெனிபர் வால்டர்ஸ் என்ற பெயரில் வரும் அவரது காட்சிகள் ட்ரெயிலரிலே ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டுகிறது. மேலும், வில்லன் கதாபாத்திரத்திலும் ஏலியன் தோற்றம் போல ஒரு ராட்சசனை உருவாக்கியுள்ளனர். மேலும், பல்வேறு சூப்பர் ஹீரோக்களின் காட்சிகளும் ட்ரெயிலரில் இடம்பெற்றுள்ளதால் அடுத்த மாபெரும் சூப்பர் ஹீரோக்களின் படங்களுக்கான ஒரு கனெக்டிவிட்டியாகவே இந்த வெப்சீரிஸ் பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படங்களுக்கு பிறகு வெளியான மார்வெல் படங்களிலே சமீபத்தில் வெளியான ஸ்பைடர்மேன் படம் மட்டுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், தோர் ஆகிய படங்கள் முழுமையாக ரசிகர்களை திருப்தியடைய செய்யவில்லை. இருப்பினும், விரைவில் அவெஞ்சர்ஸ் போன்று சூப்பர்ஹீரோக்கள் ஒருங்கிணையும் மாஸ் திரைப்படம் ஒன்று அவெஞ்சர்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ட்ரெயிலராக வெளியாகியுள்ள ஷீ ஹல்க் சீரிஸ் வரும் ஆகஸ்ட் 17-ந் தேதி டிஸ்னி – ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரீலிசாக உள்ளது. ஓடிடி தளத்தில் சீரிசாக வெளியாக உள்ள இந்த ஷீ ஹல்க் முதல் எபிசாட் வரும் ஆகஸ்ட் 17-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், கடைசி எபிசோட் வரும் அக்டோபர் மாதம் 12-ந் தேதி வெளியாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்