ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி படப்பிடிப்பின் போது தீ விபத்து நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலிவுட்டில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் மூலம் அறிமுகமாகி சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன்.
படப்பிடிப்பில் விபத்து
இறுதியாக பிரபுதேவா நடித்த பகீரா படத்தை இயக்கிய இவர் தற்போது விஷாலின் அடுத்த படமான மார்க் ஆண்டனி படத்தை இயக்கி வருகிறார்.
விஷால், ரித்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா. தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்ட பலர் நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்தி இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஷால் இறுதியாக நடித்த எனிமி, வீரவே வாகை சூடும், லத்தி படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும் மார்க் ஆண்டனி படத்தை எதிர்பார்த்து விஷால் ரசிகர்கள் காத்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். வினோத் குமார் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் திடீர் தீ விபத்து நிகழ்ந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு
சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் நடைபெற்ற படப்பிடிப்பில் முன்னதாக ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், ஷூட்டிங் சமயத்தில் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை, ஈவிபி ஸ்டுடியோவில் துணை நடிகர்கள், தொழிலாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்குபெற்ற ஷூட்டிங்கின்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தொழில்நுட்பக் கோளாறால் லாரி நிற்காமல் ஓடியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷால், எஸ்.ஜே.சூர்யா இருவருமே இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்படும் நிலையில் விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Watch Video : மைம் மூலம் காதலை வெளிப்படுத்திய கோபி... கண்கலங்கிய போட்டியாளர்கள்... களைகட்டிய குக் வித் கோமாளி மேடை