மார்க் ஆண்டனி
பல்வேறு சிக்கல்கள் சவால்களை எதிர்கொண்டு கடைசியாக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. த்ரிஷா இல்லனா நயன்தாரா, பகீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
விஷால் , எஸ்.ஜே.சூர்யா, ரித்து0 வர்மா, ஒய்.ஜி மகேந்திரன், செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்து ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். சைன்ஸ் பிக்ஷன் கேங்ஸ்டர் கதையாக உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்குத் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை கொடுத்தது.
மீண்டும் மார்கெட்டிற்கு வந்த விஷால்
மார்க் ஆண்டனி படத்திற்கு முன்பாக விஷால் நடிப்பில் வெளியான லத்தி திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாத நிலையில் அவரது கரியரில் ஒரு நல்ல வெற்றிப்படத்தின் குறை இருந்து வந்தது. இப்படியான நிலையில் வெளியாகி மார்க் ஆண்டனி சரிந்து கிடந்த விஷாலின் மார்கெட்டை மீண்டும் துக்கி நிறுத்தியிருக்கிறது.
விஷால் நடித்த படங்களில் 100 கோடி வசூல் செய்த முதல் படம் மார்க் ஆண்டனி. சமீபத்தில் மார்க் ஆண்டனி திரைப்படம் திரையரங்குகளில் 25ஆவது நாளை நிறைவு செய்தது. இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில் “ மார்க் ஆண்டனி திரைப்படம் 25 ஆவது நாளை திரையரங்குகளில் தொடர்கிறது என்பதை மகிழ்ச்சிகரமாக பகிர்ந்துகொள்கிறேன். இந்த படத்தை ரசித்து கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் மார்க் ஆண்டனியின் உலகத்திற்குள் சென்று வருவதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அவர் கூறியிருந்தார்.
ஓடிடி ரிலீஸ்
வெற்றிகரமான திரையரங்க பயணத்தைத் தொடர்ந்து தற்போது ஓடிடி பயணத்தை தொடங்க இருக்கிறது மார்க் ஆண்டனி படம். வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி அமேசான் பிரைமில் மார்க் ஆண்டனி படம் வெளியாக இருக்கிறது. திரையரங்கத்தில் இந்தப் படத்தை பார்க்க தவறவிட்டவர்கள் ஓடிடியில் ரிப்பீட் மோடில் இந்தப் படத்தை பார்த்து ரசிக்கலாம்.
துப்பறிவாளன்
கடந்த 2017 ஆம் ஆண்டும் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து இயக்க இருக்கிறார் நடிகர் விஷால். தனது சொந்த தயாரிப்பில் வெளியான முதல் பாகத்தை இயக்குநர் மிஸ்கினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் தற்போது இரண்டாவது பாகத்தை தானே இயக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.