விஷால் , எஸ். ஜே சூர்யா நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், மார்க் ஆண்டனி படம் குறித்தான கூடுதல் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


ஆதிக் ரவிச்சந்திரன்


த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசத்திற்கு நெருக்கமான காட்சியமைப்புகள் என சர்ச்சையில் சிக்குவதற்கான கதைளையே தொடர்ந்து படங்களாக இயக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். தற்போது அவர் இயக்கி இருக்கும் படம் மார்க் ஆண்ட்னி. இந்த முறை கொஞ்சம் பெரிய பட்ஜட்டில் சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தவிர்த்து அனைவரும் எதிர்நோக்கும் வகையில் ஒரு கதையை தேர்வு செய்திருக்கிறார்.


மார்க் ஆண்டனி






விஷால், எஸ்.ஜே . சூர்யா உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சைன்ஸ் ஃபிக்‌ஷன் மற்றும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.


இந்த ட்ரெய்லரில் இடம்பெற்ற “கேங்ஸ்டர்னா டிசிப்பிளின் வேணும்“ என்று எஸ்.ஜே சூர்யா பேசும் வசனம் மக்களிடம் ட்ரெண்டாகி இருக்கிறது. மேலும் சில்க் ஸ்மிதா போலவே விஷ்ணு பிரியா என்பவர் நடித்திருப்பது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது படம் குறித்தான கூடுதல் தகவல்களை  நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.


மார்க் அண்டனி படத்தின் ட்ரெய்லரின் தொடக்கத்தில் நடிகர் கார்த்தியின் குரல் இடம்பெற்றிருந்தது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்தபடி படத்தின் அத்தனை கதாபாத்திரங்களுக்குமான அறிமுகத்தை நடிகர் கார்த்தி பேசியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


 எஸ். ஜே சூர்யாவுக்கு இந்தப் படத்தில் அதிக வசனம் இருந்ததனால் அவருக்கான டப்பிங் மட்டுமே மொத்தம் 12 நாட்கள் நடந்ததாகத் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் தொடர்ச்சியாக 22 மணி நேரம் எஸ்.ஜே சூர்யா டப்பிங் பேசியதாக கூறியுள்ள அவர்,  படத்தில் சில்க் ஸ்மிதா ஒரு ஆபத்தில் இருக்கும் போது கேங்ஸ்டர்களாக இருக்கும் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யாவிடம் உதவி கேட்கும் காட்சி இவ்வளவு வைரல் ஆகும் என யாருமே எதிர்பார்க்கவில்லை என்றும் ஆதிக் தெரிவித்துள்ளார்.


படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்காக மட்டுமே படத்தின் தயாரிப்பாளர் வினோத் ஒன்றரை கோடி செல்விட்டிருப்பதாகவும் படத்தின் க்ளைமேக்ஸ் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மொத்தம் 800 ஜூனியர் ஆர்டிஸ்ட்களைக் கொண்டு 4 நாட்கள் பயிற்சி செய்து மொத்தம் 14 நாட்கள் இந்த காட்சி எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.