தமிழ் சினிமாவில் உருவெடுத்துள்ள மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக திகழும் மாரி செல்வராஜ் சாதி அரசியலை, அரசியல் கட்சிகளுக்குள் இருக்கும் சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை தோலுரித்து காட்டும் வகையில் கடந்த ஆண்டு இதே நாளில் வெளியான படம் தான் 'மாமன்னன்'. இப்படம் வெளியாகி இன்றுடன் முதலாம் ஆண்டை நிறைவு செய்கிறது. 


 




உதயநிதி ஸ்டாலின் , வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. அடிமுறை சண்டை பயிற்சியாளராக உதயநிதி ஸ்டாலின் நடிக்க அவரின் தந்தையாக வடிவேலு சட்டமன்ற உறுப்பினராக நடித்திருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சாதி மோதலில் தந்தை செய்த செயல் பிடிக்காதல் அப்பா மகன் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கிறது. 


வேறு சாதியை சேர்ந்த பகத் பாசில், தந்தையை அவமரியாதை செய்ய மகன் உதயநிதி கொந்தளிக்கிறார். இதனால் உதயநிதி - பாசில் இடையே மோதல் ஏற்படுகிறது. இதை பொறுத்து கொள்ள முடியாத பகத் பாசில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி கொள்வதற்காக அடுத்த சட்டமன்ற தேர்தலில்  எதிரெதிராக மோதிக்கொள்கிறார்கள். யார் வெற்றிவாகை சூடினார்கள்? என்பது தான் படத்தின் கதைக்களம். 


மாறுபட்ட தோற்றத்தில் வடிவேலு:


படத்தின் தலைப்புக்கு உரிய நாயகனாக வடிவேலு வேறுவிதமான பரிணாமத்தை வெளிக்காட்டி இருந்தார். அவர் ஒரு நகைச்சுவை நடிகர் என்பதையே மறந்து போகும் அளவுக்கு கோபம், பணிவு, பேச்சு என வித்தியாசமான ஒரு நடிகராக முழு படத்தின் திரைக்கதையும் தன் தோள் மீது சுமந்து இருந்தார். தந்தையின் உரிமைக்காக ஆவேசம் கொள்ளும் மகனாக உதயநிதி ஸ்டாலின் இறுக்கமான முகத்துடன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவரின் திரை பயணத்தில் இது மிக முக்கியமான படமாக அமைந்தது. யாராக இருந்தாலும் அடக்கி ஆள வேண்டும் என்ற மனோபாவம் கொண்ட வில்லத்தனமான கதாபாத்திரமாகவே உருமாறி இருந்தார் பகத் பாசில். 


 



 


ஏழை மாணவர்களின் மேற்படிப்புக்காக கோச்சிங் கிளாஸ் எடுக்கும் கதாபாத்திரமாக கீர்த்தி சுரேஷ் மிகவும் துணிச்சலான ஒரு கதாபாத்திரத்தில் வழக்கமான மேக் அப், காஸ்டியூம் என எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் நார்மல் லுக்கில் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்து இருந்தார். 


படத்தின் திரைக்கதையை உள்வாங்கி ஒவ்வொரு காட்சிகளுக்கு தேவையான உணர்வுகளை தன்னுடைய பின்னணி இசை மூலம் கடத்தி சென்று விட்டார். ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வர் கதைக்களத்துக்கு உயிர் கொடுத்து இருந்தார். 'பரியேறும் பெருமாள்' படம் மூலம் சாதி காதல், 'கர்ணன்' படம் மூலம் சாதி வேறுபாட்டை காட்சிப்படுத்திய மாரி செல்வராஜ் 'மாமன்னன்' படம் மூலம் சாதி அரசியலை துணிச்சலுடன் கையாண்டுள்ளார்.