ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாரி செல்வராஜ் இயக்கிய வாழை மற்றும் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி ஆகிய இரு திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகின. இரு படங்களும் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன.


இரு படங்களும் தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் படங்கள் என மக்கள் கூறி வருகிறார்கள். விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்ற இப்படங்கள் முதல் நாளில் எவ்வளவு வசூல் ஈட்டியிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்


கொட்டுக்காளி


கூழாங்கல் படத்திற்கு பின் பி.எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ள படம் கொட்டுக்காளி, சூரி , அன்னா பென் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சிவகார்த்திகேயனின் எஸ்.கே ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்தது இப்படம். 


மதுரையின் குக்கிராமத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் கொட்டுக்காளி. மீனா என்கிற பெண் பிற சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலிப்பதால் அவரது மனதை மாற்ற சாமியாரிடம்  கூட்டிச் செல்கிறார்கள் அவரது குடும்பத்தினர். மீனாவின் முறை மாமன் பாண்டியாக சூரி நடித்துள்ளார்.  கிராமப்புறங்களில் சடங்குகள் , மூடநம்பிக்கைகள் வழியாக பெண்கள் மீது செலுத்தப்படும் அடக்குமுறையும் எதார்த்தமான திரைமொழியுடனும் அதே நேரத்தில் காத்திரமாகவும் சொல்கிற கொட்டுக்காளி. 


இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ 47 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது 


வாழை


மாரி செல்வராஜின் நான்காவது படமாக உருவாகியிருக்கும் படமே வாழை.


பரியேறும் பெருமாள், கர்ணன் படம்போலவே திருநெல்வேலியே இந்த படத்திற்கும் கதைக்களம். பள்ளி சிறுவனான சிவனைந்தம்தான் கதையின் நாயகன். கதையின் நாயகனான சிவனைந்தமும், அவரது நண்பன் சேகரும் பள்ளி விடுமுறை நாட்களில் வாழை தார் சுமக்கும் வேலைக்குச் செல்கிறார்கள். வாழைத் தார் சுமக்கும் பணிக்கு வேண்டா வெறுப்புடன் செல்லும் சிவனைந்தத்தின் பள்ளி பருவத்தையும், அவனது குடும்ப சூழலையும், அவனது ஆசைகளையும், அவன் வாழைத் தார் சுமக்கும் பணிக்குச் செல்லாத அந்த ஒரு நாளில் நிகழும் சம்பவம் என்ன? என்பதையும் மிக மிக தத்ரூபமாக படமாக்கியுள்ளார் மாரிசெல்வராஜ்.


வாழை திரைப்படம் முதல் நாளில் உலகளவில் 1.35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இது வாழையா? கொட்டுக்காளியா என்கிற போட்டி என்றில்லாமல் இரு படங்களுக்கும் மக்களிடையே சம அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது. இரு படங்களும் வழக்கமான கமர்ஷியல் படங்களிடம் இருந்து வேறுபட்ட ஒரு கதைசொல்லல் முறையை கையாண்டிருப்பதும் கதைக்கு முக்கியத்துவம் அளித்துள்ள படங்கள் என்பதால் இரு படங்களையுமே மக்கள் உற்சாகத்தோடு பார்க்க செல்கிறார்கள்