ஜூலை 21-ஆம் தேது வெளியாக இருக்கும் பார்பீ திரைப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ரையன் கோஸ்லிங்கை கதாநாயகனாக ஏன் தேர்வு செய்யப்பட்டார் என்கிற காரணத்தை தெரிவித்துள்ளார் படத்தின் கதாநாயகி மற்றும் இணைத் தயாரிப்பாளரான மார்கரட் ராபீ.
சண்டையை விலக்கிவிட்ட ரையன் கோஸ்லிங்
பார்பீ படத்தில் நடிக்க ரையன் காஸ்லிங்கை தான் தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம், சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இணையதளத்தில் ஒரு வீடியோவை பார்த்ததாகவும் அந்த வீடியோவில் இருவர் நடிரோட்டில் சண்டை போட்டுக்கொண்டிருந்தபோது அங்கு மிக சாதாரணமாக வந்த ரையன் கோஸ்லிங் அந்த இருவருக்கும் இடையில் நிகழ்ந்த சண்டையை விலக்கிவிட்டதாகவும் கூறினார்.
இந்த வீடியோவைப் பார்த்தபிறகு பார்பீ படத்தில் நடிப்பதற்கு அவர் ஏற்ற நடிகர் அவர் என்று தனக்கு தோன்றியதாக கூறினார் மார்கரட் ராபீ. முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்தும் இந்த மாதிரியான ஒரு படத்தில் நடிக்கும் நடிகர், தனது ஆண் என்கிற அகம்பாவம் சீண்டப்படாமல் இருப்பது அவசியமானது. அதுவும் குறிப்பாக ஒரு பெண் தன்னை இயக்கப்போகிறார் என்கிற எந்த வித தாழ்வுணர்ச்சியும் ஒருத்தருக்கு இல்லாமல் இருக்க வேண்டும் என்றும், இந்த வீடியோவை பார்த்தவுடன் ரையன் காஸ்லிங் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடிப்பார் என்று தனக்கு தோன்றியதாக கூறினார் அவர்.
பார்பீ
குழந்தைகளுக்கு அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பிடித்தமான கார்ட்டூன் கதாபாத்திரம் பார்பி. பார்பியின் உலகத்தை படமாக்கியுள்ளார் ஹாலிவுட் இயக்குநர் கிரெட்டா கர்விக். ரையன் காஸ்லிங் மற்றும் மார்கரெட் ராபீ ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை மிக வண்ணமயமான ஒரு படமாக எடுக்க விரும்பியிருக்கிறார் படத்தின் இயக்குநர். பார்பியின் உலகத்தை கண்முன் உருவாக்குவதற்காக இயக்குநரும் ப்ரோடக்ஷன் டிசைனர் சாரா ஆகிய இருவரும் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிங் நிற உலகம்
இந்த படத்தில் வரும் வீடுகள் அனைத்தும் பார்பி பொம்மைகளின் வீடுகள் போல வடிவமைக்கப்பட்டு அவற்றுக்கு பிங்க் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகள், கார்கள், சாலைகளுக்கு எல்லாம் பிங்க் நிற பெயிண்டைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எந்த அளவிற்கு என்றால் தற்போது சர்வதேச சந்தையில் பிங் நிறப் பெயிண்ட் தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு இந்தப் படத்தில் பெயிண்ட் பயன்படுத்தியுள்ளார்கள் என குற்றம் சாட்டப்படும் அளவிற்கு என்றால் பாருங்களேன்.
கிரெட்டா கெர்விக்
ஹாலிவுட்டில் பெண்களின் உணர்வுகளை மிக அழகாக பதிவு செய்யும் இயக்குநர்களில் முக்கியமானவர் கிரெட்டா கெர்விக். இவர் இயக்கிய பிரான்சிஸ் ஹா இன்றுவரை ஆண், பெண் இருதரப்பினராலும் சிலாகிக்கப்படும் திரைப்படம்.
மேலும் லுயி மே ஆல்காட் எழுதிய லிட்டில் வுமன் என்கிற நாவலை தனது பார்வையில் புதிய கண்ணோட்டத்தில் இயக்கியிருப்பார் க்ரெட்டா. கடந்த 2019-ஆம் ஆண்டு ஸ்கார்லெட் ஜொஹான்சன் நடித்த மேரேஜ் ஸ்டோரி திரைப்படத்தை இயக்கினார் க்ரெட்டா.
ஒரு உறவு முறிவதை மிக அழகாக சித்தரித்திருப்பார். தற்போது பெண்களுக்கான கார்டூன்கள் என வரையறுக்கப்படும் பார்பி குறித்த கதையை எடுக்கும் க்ரெட்டா அதில் என்ன புதிதாக சொல்லப்போகிறார் என்பதை பார்க்க மிக ஆர்வமாக அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.